தந்தையுடன் 1,200 கி.மீ. 
சைக்கிள் ஓட்டிய சிறுமி
பீஹார் மாணவிக்கு பந்தய வாய்ப்பு

கூர்கானில் இருந்து 1,200 கி.மீ., தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு, காயமடைந்த தந்தையை சைக்கிளில் பின்னால் அமர வைத்து அழைத்து வந்த 15 வயதான சிறுமிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பீஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் பஸ்வான். இவர், டில்லி அருகேயுள்ள கூர்கானில், ரிக்க்ஷா ஒட்டி வருகிறார். அவரது மனைவி, தர்பங்காவில் அங்கன்வாடி ஊழியராக உள்ளார். அவர்களுக்கு ஜோதி(15) மற்றும் 4 வயதில் மகன் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் டில்லியில் மோகன் சாலை விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டது. இதனால், ஜோதி தந்தையை பார்க்க வந்துள்ளார்.

அதே நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறுமி தனது தந்தையுடனேயே தங்க நேரிட்டது. ஊரடங்கு காரணமாகவும், விபத்தில் சிக்கியதாலும், மோகனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால், கைகளில் இருந்து பணம் செலவாகிவிட, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்துள்ளார். மோகனும், ஒரு வேலை மாத்திரை வாங்குவதை நிறுத்தி, அதில் மிச்சமாகும் பணத்தை கொண்டு ஒரு வேளை சாப்பிட்டுள்ளனர்.

அதேநேரத்தில், வீட்டு உரிமையாளரும், இருவரையும் உடனடியாக காலி செய்யும்படி மிரட்டல் விடுத்தார். இருவரும் எவ்வளவு கெஞ்சியும் அவர் மசியவில்லை. இதனால், ஜோதி சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்தார். அதேநேரத்தில் ஊர் சென்றால், தனது தந்தையுடன் தான் என்பதில் முடிவு செய்தார். ஊரடங்கு காரணமாக ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து இல்லாததால், சைக்கிள் மூலம் ஊர் திரும்ப முடிவு செய்தார்.

இதற்காக தெரிந்தவர்களிடம் பணம் கடனாக வாங்கி, சைக்கிள் ஒன்றை வாங்கினார். அதில் ஊர் திரும்ப ஜோதி தயாரானார். ஆனால், அதில் சிக்கல் மற்றும் ஆபத்து அதிகம் என தந்தை எடுத்து கூறியும். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜோதி, தந்தையை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பினார். ஜோதி சைக்கிள் ஓட்ட, பின்னால் மோகன் அமர்ந்து கொண்டார்.

கூர்கானில் இருந்து 1,200 கி.மீ., தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு, எட்டு, நாள் சைக்கிள் பயணத்திற்கு பின்னர் வந்து சேர்ந்தார். தினமும் 50 அல்லது 60 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டிய ஜோதிக்கு, வழியில் லாரி டிரைவர்கள் உதவியுள்ளனர். இந்த பயணத்தின் போது ஒரு சில வேளைகளில் அவர்களுக்கு சாப்பிட உணவு கிடைக்கவில்லை.

சைக்கிளில் சொந்த ஊர் திரும்பிய ஜோதியின் கதை கேட்டதும், அப்பகுதி மக்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள், சிறுமியை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கியுள்ளனர். ஊரடங்கு முடிந்த பின்னர் ஜோதிக்கு உதவுவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. 9 ம் வகுப்பில் சேர்த்து படிக்க வைக்கவும், நிதியுதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
1,200 கி.மீ. தொலைவுக்கு தனது தந்தையை பின்னால் ஏற்றிக்கொண்டு ஒரு சிறுமி சைக்கிள் ஓட்டி இருக்கிறார் என்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி விட்டது.

இதுபற்றி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள உள்ள தேசிய சைக்கிளிங் பெடரேசன் அறிந்து அதிர்ந்துபோனது. அதெப்படி ஒரு சிறுமிக்கு இது சாத்தியமாயிற்று என்று வியந்தும் போனது.

இப்போது சிறுமி ஜோதிகுமாரியை அழைத்து அவரது சைக்கிள் ஓட்டும் திறனை சோதித்துப்பார்ப்பது என்று முடிவு செய்திருக்கிறது, இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு.

இதுபற்றி இந்த அமைப்பின் தலைவர் ஓங்கர் சிங் சொல்லும்போதே வியந்து போகிறார்....

ஒரு எட்டாம் வகுப்பு மாணவி இதை செய்திருக்கிறார் என்றால் அது வியக்க வைக்கிறது. அந்தச் சிறுமியிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இல்லையென்றால் 1,200 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டுவது என்பது சாதாரணமானது அல்ல. அந்தச்சிறுமியிடம் அதற்கான வலிமை, உடல்வாகு இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள கணினிமயமாக்கப்பட்ட சைக்கிளில் அந்த சிறுமியை அமர வைத்து சோதிப்போம். நாங்கள் தேர்ந்தெடுக்கும் 7 அல்லது 8 அம்சங்களில் அவர் தேர்ச்சி பெறுகிறாரா என்று பார்ப்போம். தேர்ச்சி பெற்று விட்டால், ஜோதிகுமாரி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்க முடியும். ஏற்கனவே எங்களிடம் 14, 15 வயதில் 10 வீரர்கள் இருக்கிறார்கள். இளம் வீரர்களை நாங்கள் வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top