சாய்ந்தமருது கடற்கரை ஆஸ்பத்திரி
எனது சில நினைவுகள்
டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல்
கடற்கரை ஆஸ்பத்திரி என்று அழைக்கப்பட்ட சாய்ந்தமருது
வைத்தியசாலையின் முன்னோடி 1952இல் அமைக்கப்பட்ட மத்திய மருந்தகமாகும்.
இம் மருந்தகமும் இங்கு பின்னர் கட்டப்பட்ட பல விடுதிகளும்
கட்டடங்களும் 2004.12.26ம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் முற்றாக அழிவடைந்தன. அவ் வைத்திய சாலை
கோலோச்சிய வளவில் தற்போது பள்ளி வாசல், றியாலுல் ஜன்னா வித்தியாலயம்,மீனவர்நிலையங்கள், இளைஞர் வளநிலையம்,சுகாதார நிலையம், மருந்துக்களஞ்சியம் என்பன அமைந்திருக்கின்றன.
1947இல் நடந்த பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற
உறுப்பினர் கேட் முதலியார் M.S.காரியப்பர் அவர்கள் மக்களின் வேண்டு கோளுக்கிணங்க இங்கு ஒரு மத்திய மருந்தகம்
அமைக்க அக்கால சுகாதார அமைச்சர் SWRD பண்டாரநாயக அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
1952இல் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
மருந்தகம் கட்டப்பட்ட வளவு M.S.காரியப்பருக்குச் சொந்தமான வளவு எனவும் M.S.காரியப்பர் அவர்களின் வேண்டுகளின்பேரில்
சாய்ந்தமருதில் மருந்தகம் கட்டும்படி கல்முனை M.O.H.க்கு வந்த தந்தியில் சொற்பிரயோகம் மாறியதால் (on
the request மாறி on the land)
ஏற்பட்ட தவறு எனவும் அதனை
M.S. அவர்கள் பெரு மனதோடு
விட்டுக் கொடுத்ததாகவும் பலர் சொன்னது ஞாபகம்.
இம் மருந்தகத்தின் முதல் வைத்தியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
டாக்டர் எஸ் .முத்துக்குமாரப்பிள்ளை ஆகும். இவரின் சிறந்த சேவையை மக்கள் பெரிதும்
மதித்தனர். இவர் மிகக் கம்பீரமாக வெள்ளைக் கோட் அணிந்துதான் மருந்தகத்துக்கு
வருவார்.தமிழில் "ஆள் பாதி ஆடை பாதி" என்று சொல்வது போல் ஆங்கிலத்தில்
"Pay the Doctor who dresses well" என்ற பழமொழி உண்டு.இதற்கேற்ப இவர் நடந்தார்.
ஒலுவில்,பாலமுனை, கொளனி போன்ற பல வெளியூர்களிலிருந்தும்
நோயாளிகள் கூட்டுக் கரத்தைகளில் இவரிடம் மருந்து பெற வந்ததாக முன்னோர் கூறியது
ஞாபகம்.
நான் பாடசாலை மாணவனாக இருந்தபோது இவரை ஒரு "Role
Model"ஆக மதித்தேன்.
பிற்காலத்தில் நான் 1963ம் ஆண்டில் கொழும்பு ஸாஹிறா கல்லூரியில் GCE(A/L) பரீட்சைக்கு ஆயத்தமான போது அக்கல்லூரியில்
ஏற்பட்ட நிர்வாகக் குழப்ப நிலை காரணமாக "அபோதிகரி" பயிற்சி நெறியைத்
தெரிவு செய்வதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் அச் சேவை ஒரு மூடப்பட்ட சேவை ( closed
service) என நான்
அறிந்திருக்கவில்லை. ஏனைய சேவைகள் போன்று படித்து முன்னேறலாம் என நினைத்தேன்.
அப்போது யாரும் இது தொடர்பாக ஆலோசனை கூறவில்லை. எது எவ்வாறாயினும் கடந்த ஐம்பது
ஆண்டுகளுக்குமேலாக இவ்வூரில் சம காலத்தில் இத் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு
மேலாக என்னால் மனம் நிறைந்த சேவையைச் செய்ய முடிந்தது மகிழ்ச்சி.
அல்ஹம்துலில்லாஹ்!
1956 தேர்தலின் போது மக்கள் விடுத்த
வேண்டுகோளுக்கிணங்க கேட் முதலியார் M.S காரியப்பர் M.P. அவர்கள் அக் கால சுகாதார மந்திரி திருமதி விமலா விஜயவர்தனவை
1957 நவம்பர் மாதம் அழைத்து
வந்து மிகக் கோலாகலமாக சாய்ந்தமருது மருந்தக வளவில் மகப்பேற்று மனைக்கான அடிக்கல்
நாட்டினார் .
ஆயினும் டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் வைத்திய
சாலை வீதியில் உள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வேலைகள் தடைப்பட்டன. அதன்
பின்னர் 1973 வரை இங்கு
எதுவித அபிவிருத்தியும் நடக்கவில்லை.
இதற்கு 1960ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் ஒரு காரணமாக
இருக்கலாம்.
இது போலவே 1952ம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கல்ஓயா
அபிவிருத்தி திட்டத்தின் பூரண பயனை எம் மக்கள் பெற முடியாமல் போய்விட்டது.
1957க்குப் பிறகு 15 ஆண்டுகளாக பெரும்பான்மையான சாய்ந்தமருது மக்கள்
இம் மருந்தகத்தை மறந்து அக்கறையற்றிருந்தனர்.
1973.05.01ம் திகதி முதன்முதலாக நான் இங்கு கடமையாற்ற வந்த போது இம்
மருந்தகம் மிகவும் கவனிப்பாரற்ற நிலையில் காட்சியளித்தது .
இங்கு எனக்கு முன் வேலை செய்த டாக்டர் சிவானந்தன் என்பவர்
மிகச் சிறந்த உத்தியோகத்தர். அவர் தன்னால் இயன்ற வேலைகளை மிகக் கச்சிதமாக செய்து
வந்துள்ளார். ஆயினும் பொதுமக்களினதும் பிரதேச முக்கியஸ்தர்களினதும் அக்கறை இங்கு
செலுத்தப்படவில்லை. இங்கு ஒரு மருந்து கலவையாளர்கூட இருக்க வில்லை. ஒரு தொழிலாளி
மட்டுமே இருந்தார். மருந்தகம் , விடுதி , கிணறு , தண்ணீர் தாங்கி , பொது மல சல கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு ஏக்கருக்கு கூடிய வளவைச் சுற்றி
இடப்பட்டிருந்த முட்கம்பி வேலி அழிந்து போயிருந்தது. கொங்கிறீட் கட்டைகள் பலவும்
காணாமல் போயிருந்தன.முன் கேட்டின் ஒரு சில எச்சங்களே காணப்பட்டன.
மருந்தகமும் விடுதியும் 1952இல் கட்டிய பின் பராமரிக்கப்படாத நிலையில் புறாக்களின் கூடாகக் காணப்பட்டது.
தண்ணீர் பம்ப் (Hand Pump) மற்றும் பொது
மல-சல கூடம் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்தது. இங்கு வேலை செய்த வைத்தியர் தண்ணீரை
கிணற்றிலிருந்து வாளிமூலம் பெற்று வந்துள்ளார்.
மருந்தக வளவு திறந்த வெளியாக இருந்தது. அதிகாலையில் பல
சிறுவர்கள் தமது காலைக் கடனைக் கழித்து விட்டுச் செல்வர். வெயிலேறியதும் பலர் நெல்
காயவைத்துக் கொண்டிருப்பர். கடலில் மீன் அதிகம் பட்டால் அவையும் இங்கே தான் கருவாடாக
காயவைக்க வரும். வைத்திய சாலை வீதியால் கடற்கரை நோக்கி வரும் வாகனங்கள் (வண்டில், துவிச் சக்கர வண்டிகள்) எல்லாம் இவ்வளவூடாகவே
சென்றன. சிலரது ஆடு, மாடுகளுக்கு இவ்வளவே
தரிப்பிடம். மாலை நேரம் தொடக்கம் இரவு நடுநிசி வரை சில இளைஞர்களுக்கு மருந்தகமே
தஞ்சம்.
இவர்கள் புறாப் பிடிக்கவும் அப்போது வழக்கில் இருந்த போதை
வஸ்துகள் பாவிப்பதற்கும் வேறு துர்- நடத்தைகளுக்கும் இங்கு கூடினர்.
1957ம் ஆண்டு டிசம்பர் வெள்ளத்தில் அள்ளுண்டு போன வைத்திய சாலை வீதியில் தோணாவின்
மேல் இருந்த பாலத்திற்குப் பதிலாக கடந்த 15 வருடங்களுக்கு மேலாக புதிய பாலம் போடப்படவில்லை. இரண்டு தென்னை மரக்குத்திகள்
தோணாவுக்கு மேல் போடப்பட்டிருந்தன. இதற்கு மேல் நடந்து வரும் பெண்கள் துணையுடன்
தான் வரவேண்டும். தனியாக வந்த பல ஆண்களும் பெண்களும் தோணாவுக்குள் விழுந்து
காயப்பட்ட வரலாறு நிறைய உண்டு.
அக்காலத்தில் மருந்தகத்துக்கு அரிதாகவே வாகனங்கள் வரும்.
அவை மாளிகா வீதியால் கடற்கரை வந்து இங்கு வந்தன.
நான் இங்கு மேற்கொண்ட முதலாவது வேலையாக அக்கால கிராம சபைத்
தலைவர் யூசுப் மரைக்கார் மற்றும் உப தலைவர் செயின் மரைக்கார் ஆகியோரைச் சந்தித்து
அவசரமாக புதிய பாலமொன்றைப் போடவைத்தேன். அதனையும் இரவு நேரங்களில் கூடும் சில
விஷமிகள் விட்டு வைக்கவில்லை. அந்தப் பாலத்தின் இரு பக்கங்களிலும்
அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தூண்களைச் சேதப்படுத்தியிருந்தனர்.
கடந்த 45 வருடங்களாக அந்தப் பாலம் அதே நிலையில்தான் இருக்கின்றது என நினைக்கின்றேன்.
அந்தப் பாலத்திற்குப் பதிலாக புதிய அகலமான பாலம் அங்கு
அவசியம்.
சமீபத்தில் சாய்ந்தமருதில் " அஷ்ரப் ஞாபகார்த்த
பூங்கா" அமைத்த கல்முனை மாநகர சபை இந்தப் பூங்காவின் முகப்பில் உள்ள இப்
பாலத்தைக் கவனத்தில் கொள்ளாதது கவலைக்குரியது.
சுனாமியின் பின்னர் வைத்திய சாலையின் நிலத்தையும்
கட்டங்களையும் பகிர்வு செய்தவர்களால் வைத்திய சாலை வீதி நேராக கடற்கரை வீதியைச்
சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. றியாலுல் ஜன்னா கல்லூரிக்கு ஒதுக்கிய வளவு
பள்ளிவாசல் பொதுவுடன் கொடுபட்டிருந்தது. இதனால் வைத்திய சாலை வீதியில் வரும் வாகனங்கள்
வட பக்கம் அல்லது தென் பக்கம் உள்ள சிறிய வீதிகளில் பயணித்தே கடற்கரை வீதியை அடைய
முடியும். இதனால் பெரிய வாகனங்கள் திரும்புவதற்கு முடியாத நிலை. முன்னர்
வைத்தியசாலை வளவினுள் திருப்புவதால் பிரச்சினை இருக்கவில்லை.
நான் பெரிய பள்ளிவாசல் தலைவராக இருக்கும்போது ஒரு நாள்
மேற்குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோதே இதனை அவதானித்தேன். உடனே நான் பாடசாலைக்
கட்டடவேலைக்குப் பொறுப்பாகவிருந்த "கோல்" நிறுவன அதிகாரியிடம் இது
தொடர்பாக விசாரித்தேன். அவர் தாங்கள் D.S.தந்த படத்தின் பிரகாரம் கட்டுகின்றோம். வைத்தியசாலை வீதிக்கு இடம் கொடுக்க
முடியாது என்றார். பின்னர் நான் இந்தப் பிரச்சினையை D.S.க்கு விளக்கிய பின் புதிய படம் கீறி பாதைக்கு
இடம் ஒதுக்கப்பட்டது.
இதில் வேறு யாருமே அக்கறை செலுத்தியதாக நான் அறியேன்.
அடுத்த நடவடிக்கையாக கட்டடத் திணைக்கள தலைமைப்
பொறியியலாளரைச் சந்தித்து மருந்தகம்,விடுதி,நீர் விநியோகம் மற்றும் பொது மல-சல கூடம் ஆகியன உள்ளடக்கிய
பூரண பராமரிப்பு வேலை செய்வதற்கு வேண்டுகோள் கொடுத்தேன்.
அவர் மிக விரைவாக அனைத்து பராமரிப்பு வேலைகளையும் செய்து
முடித்தார்.
இதனைத் தொடர்ந்து சுற்றிவர வேலி/மதில் கட்டுவதற்கும் முன்
கேட் போடுவதற்கும் மின்சாரம் பெறுவதற்கும் கௌரவ பா.உ. M.C. அகமதுவை அணுகினேன். அந்த வேலைகளும் கால தாமதமின்றி
முடிந்தது.
மருந்தகத்துக்கு மின்சாரம் கிடைத்ததால் தோணாவின் கிழக்குப்
பக்கம் பூராகவும் வெகு விரைவாக ஒளியூட்டப்ட்டது. இதன் பயனாக விஷமிகளின்
செயற்பாடுகளும் குறைந்தன.
இச்சந்தர்ப்பத்தில் நான் எனது குடும்பத்துடன் விடுதியில்
குடியேற ஏற்பாடுகள் செய்தேன்.
அதன் முதல் கட்டமாக பரந்த வெளிக்குள் இருந்த விடுதியைச்
சுற்றி வேலி அமைத்தேன். இதை முன்னின்று செய்தவர் எனது வாப்பாவின் சாச்சப்பா
மர்ஹூம் இஸ்மாயில்(அதிபர் நிபாயிஸ் வாப்பா).
அத்தோடு பக்கத்து வீட்டில் வசித்த எனக்கு மச்சான் முறையான
வண்டிக்காரர் செயினும் அவர்கள் பிள்ளைகளும் உதவினர். வேலியைக் கட்டிய பின்
விடுதியைத் துப்பரவு செய்து விட்டு மறுநாள் குடியேறுவதற்குத் திட்டமிட்டிருந்தேன்.
மறுநாள் வந்து பார்த்த போது வேலியின் மேலே
கட்டப்பபட்டிருந்த மாவரைக் கம்புகள் கழற்றப் பட்டிருந்தன. இது களவா அல்லது
சீண்டிப்பார்த்தலா என்று புரியவில்லை. ஆயினும் அதன் பின் எந்தத் தொந்தரவும்
இருக்கவில்லை.
இப்போது மருந்தகத்துக்கு வருவோர் தொகை அதிகரிக்கத்
தொடங்கியது. ஊரின் முக்கியஸ்தர்கள் பலரும் மருந்தகத்தைத் திரும்பிப் பார்க்கத்
தொடங்கினர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக மருந்து, உபகரணங்கள்,
மருந்துக் கலவையாளர், கிளினிக்குகள் என்பன எனது பட்டியலில் இருந்தன.
1979ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் சாய்ந்தமருது உட்பட அம்பாரை மாவட்டத்தில் உள்ள
அனைத்து வைத்திய நிலையங்களும் மட்டக்களப்பு சுகாதார அத்தியட்சகர்
நிர்வாகத்திற்குட்பட்டே இருந்தன.
நான் அடிக்கடி காலை நேர வேலை முடிந்தவுடன் (11.00மணிக்கு) மட்டக்களப்பு சென்று அத்தியட்சகர்
காரியாலத்தில் செய்ய வேண்டிய வேலைகளையும் முடித்து பிராந்திய மருந்து ஸ்டோரில்
தேவையான மருந்துகளையும் பெற்றுக் கொண்டு பி.ப. வேலைக்கு 3.00 மணிக்கு முன் வந்துவிடுவேன்..
இதன் காரணமாக இங்கு மருந்துத் தட்டுப்பாடு இல்லாமல்
இருந்தது. எனது கோரிக்கைக்கிணங்கி விரைவில் மருந்துக் கலவையாளராக பாண்டிருப்பைச்
சேர்ந்த திரு. பொன்னுத்துரை நியமிக்கப்பட்டார். இவர் தினசரி எனது விடுதிக்கு
காலையில் வந்து மருந்தகத் திறப்பைப் பெற தனது பைசிகல் மணியை அடிப்பார். இதனை
அவதானித்த எனது பிள்ளைகள் அவரை மணி மாமா என அழைத்தனர்.
இக் காலகட்டத்தில் வெளி நோயாளர் வருகை மேலும் அதிகரித்தது.
ஒரு நாளைக்கு 20-30 என்று இருந்த
தொகை 200க்கு மேற்பட்டது.திரு. பொன்னுத் துரை மாற்றலாகிச்
சென்ற பின் இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாப். U.L.A.மஜீட் மருந்துக் கலவையாளராகக் கடமையாற்றினார்.
அவ்வேளை மருந்தகத்தில் மலேரியா உத்தியோகத்தராக
கடமையிலிருந்த ஜனாப் M.I.M. அபூபக்கர்
அவர்கள் நோயாளர்களை ஒழுங்கு படுத்துவதில் பெரிதும் உதவினார். இவர் பின்னர் தாதி
உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்று தற்போது ஓய்வு நிலையில் உள்ளார்.
மருந்தகத்தில் வெளி நோயாளர் சிகிச்சைக்கு மேலதிகமாக சயரோக
நோயாளிகளுக்கான ஊசி மருந்து, குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி மருந்து போன்றவை போடப்பட்டன. வெளி நாடு சென்று
வருபவர்களுக்கான "கொறண்டைன்" பரிசோதனையும் செய்யப்பட்டது.
அக்காலத்தில் அதிகமான பிள்ளைகள் வட்டப்புழு/ கொழுக்கிப்
புழு நோய் காரணமாக இரத்தச் சோகையும் பாரிய வயிற்றையும் கொண்டவர்களாகக்
காணப்பட்டனர். சிலர் மருந்தக வளவிலேயே குந்தி நூற்றுக் கணக்கான புழுக்கள் கொண்ட
கூட்டை வெளியே தள்ளுவர். இவர்களுக்கான மருந்தே மருந்தகத்தில் நிறைய இருந்தது.
அடுத்ததாக நிறையப் பேர் சொறி சிரங்குகளோடு வந்தனர். Scabies எனும் இந் நோய்க்கான மருந்தும் மருந்தகத்தின்
பெரும் பகுதியைப் பிடித்திருந்தது.
அந்தக் காலகட்டத்தில் MOH கிளினிக்குகள் தனியார் வீடுகளிலேயே நடைபெற்றன. இதற்கான காரணம் மருந்தக
வீதியில் பாலம் இல்லாமை. பாலம் போட்டபின்
இங்கு கிளினிக்குகளை ஆரம்பிக்க முதல் கட்டமாக கல்முனை MOH இடமிருந்து திரிபோச இரண்டு பேக் கொண்டு வந்து O.P.D.க்கு வரும் போஷாக்கு குறைந்தவர்களுக்கு கொடுக்க
ஆரம்பித்தேன். ஒவ்வொருவருக்கும் அதன் பயன், பாவிக்கும் முறை எல்லாம் சொல்லி ஆளுக்கு 2 பக்கட் கொடுத்தேன். சிலர் அதனை வாங்கிச் சென்றனர். சிலர் அதனை வெளியே
வாங்கில் வைத்துவிட்டுச் சென்றனர். அவ்விதம் வைத்து விட்டுச் சென்றவர்களைக்
கூப்பிட்டபோது ஓடி ஒளிந்து கொண்டனர்.
சில மாதங்களின் பின்னர் நிலைமை மாறியது. திரிபோஷ
கிளினிக்குகளுக்கு சனங்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். இவர்களைச் சமாளிக்க
அயலில் உள்ள Sea Breeze சகோதரர்கள் உட்பட
பல இளைஞர்கள் மற்றும் மர்ஹூம் றபீக் ஆசிரியர், ஜனாப் அபூபக்கர் ( N.O.) ஆகியோர் உதவினர். மேலும் மருந்தகத்துக்கு எதிரே இருந்த தேயிலைக் கடைச்
சீனிமுகம்மது, அகமது, பதுறுதீன் போன்ற எனது உறவினர்களும் உதவினர்.
திரிபோஷவின் தேவைஅதிகரிகத்துக் கொண்டு செல்ல, கூடிய தொகை பெறப்பட்டது. இவை புகையிரதத்தில் மட்டக்களப்புக்கு வந்து
அங்கிருந்து லொறியில் இங்கு வந்தது . அப்படி ஒரு நாள் மட்டக்களப்பு புகையிரத
நிலையத்திலிருந்து ஒரு பெரிய திறந்த லொறியில் நிறைய திரிபோஷ வந்தது. வரும்போது வழி
நெடுக கடும் மழை. திரிபோஷவை கென்வஸ் துணியால் மூடியிருந்தனர். கொண்டுவந்தவர்கள்
எல்லா பேக்குகளையும் ஸ்டோரில் அடுக்கி விட்டுச் சென்றனர்.
மறு நாள் வந்து பார்த்தபோது திரிபோச பேக்குகள் எல்லாம்
பழுதடைந்து காணப்பட்டது. இதனை MOHக்கு அறிவித்து அவரது ஆலோசனையுடன் அன்று மாலை நீண்ட குழிகள் தோண்டி அவற்றைப்
புதைத்தோம்.
அடுத்த நாள் மருந்தகம் வந்தபோது குழிகள் எல்லாம் கிளறிக்
கிடந்தன. இதனை நாய்கள் செய்திருக்கும் என நினைத்தோம். ஆனால் மனிதர்கள் தான் அதைச்
செய்ததாகத் தகவல் கிடைத்தது. மனிதனின் வக்கிரமான பசி!
1974/75 ஆண்டுகளில் இம் மருந்தகம் மக்களிடையே நன்மதிப்பைப்
பெற்று மேலும் முன்னேறியது. இதனால் பல தரப்பட்ட ஊரின் முக்கியஸ்தர்கள் இதனை மேலும்
அபிவிருத்தி செய்ய ஊக்கம் தந்தனர். மர்ஹூம் ஹுசைன் மாஸ்டர் (ராசா வட்டான மகன்),
நாஸர் சமூக சேவை
முக்கியஸ்தர்களான ஊடகவியலாளர்கள் ஏ.எல் ஜுனைதீன் (மக்கள் வங்கி), ஏ.ஏ. ஹமீட் (G.S.) போன்றோர் தினசரி வந்து உதவினர்.
சில வேளை இவர்களது உதவி உபத்திரமும் ஆனது. ஒரு நாள் இவர்கள்
வீரகேசரி பத்திரிகையில் ஒரு செய்தி போட்டிருந்தார்கள். அதில் இங்கு மருந்துத்
தட்டுப்பாடு எனக் குறிப்பிட்டிருந்தனர். உண்மையில் மருந்தகத்தில் போதுமான மருந்து
வகைகள் இருந்தன. இந்தச் செய்தியைப் பார்த்து மேலதிகாரிகள் என்னிடம் விளக்கம்
கேட்டனர். இவர்களிடம் ஏன் இப்படியான செய்தியைப் போட்டீர்கள் என்று கேட்டபோது
மருந்தகத்துக்கு மேலும் மருந்துவகைகள் வந்து சேரட்டும் என்ற நன்னோக்கில்
செய்ததாகச் சொன்னார்கள். ஆனால் எனக்கு ஏற்படும் சிக்கல்களை அவர்கள் உணரவில்லை.
பின்னர் நான் கொழும்பு சென்று வீரகேசரி காரியாலத்தில் மறுப்பறிக்கை கொடுக்க
வேண்டியேற்பட்டது.
இக் கால கட்டத்தில் தான் "சாய்ந்தமருது அரச சேவையாளர்
சங்கம்" உருவானது.இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் அல் ஹிலால் வித்தியாலத்தில்
நடைபெற்றது. இதில் ஊரில் உள்ள அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி அதிகாரிகள் மற்றும் பல் தர அரச ஊழியர்கள் பங்கு பற்றினர். இக்
கூட்டத்தில் கல்விப் பணிப்பாளர் ஜனாப் A.M. மஜீட் அவர்கள் தலைவராகத் தெரியப் பட்டார்.
முக்கிய தீர்மானமாக சாய்ந்தமருது மருந்தக வளவில் பிரசவ விடுதி கட்ட அரசைக் கோருதல்
எனத் தீர்மானிக்கப்பட்டது. கூட்டம் முடிந்தவுடன் எல்லோரும் பா.உ. M.C. அகமது அவர்களின் வீட்டை நோக்கி நடந்து
சென்றோம். அங்கு அவர் எங்களை வரவேற்று வந்த நோக்கத்தைக் கேட்டறிந்தார். பின்னர்
அவர் என்னையும் தலைவரையும் தனியாக ஒரு அறைக்குள் கூட்டிச் சென்று எங்கள் கோரிக்கையை
நிறை வேற்றச் சம்மதிப்பதாகக் கூறி அதற்காக DCB இல் நிதி ஒதுக்கீடு செய்ய ஒரு நிபந்தனை
விதித்தார். அதாவது அந்த வருடம் சாய்ந்தமருதில் உள்ள எந்தப் பாடசாலைக்கும் DCBஇல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. இதற்கு
அதிபர்களின் சம்மதத்தை தலைவர் பெற்றுத்தர வேண்டும் எனக் கூறினார். அநேகமான
அதிபர்களும் அங்கு எங்களுடன் வந்திருந்தனர். இதனால் தலைவர் அவர்களுடன் கலந்து
உரையாடியபின் முடிவை ஏற்றுக் கொண்டனர். இதன் பின்னர் பா.உ. அவர்கள் அதற்கான
உத்தரவை வழங்கினார். மிக விரைவில் வேலைகளும் ஆரம்பமாகின.
மட்டக்களப்பு/அம்பாரை பிரதேசத்தில் எனது சேவைக்காலம் 31.12.1975 இல் முடிவடைவதால் நான் அண்மையில் உள்ள
சியாம்பலாண்டுவ வைத்திய சாலைக்கு மாற்றம் கேட்டுச் செல்ல ஆயத்தமானேன். யாரும் அது
தொடர்பாகக் கரிசனை செலுத்தவில்லை. ஆயினும் இதனை அறிந்திருந்த ஊரின் முக்கியஸ்தர்
ஒருவர் திருமண வீடொன்றில் பொது மக்கள் மத்தியில் " தம்பி இந்த ஆஸ்பத்திரிக்கு
வந்து எவ்வளவோ வேலை செய்துள்ளார். அவரை வேற ஊருக்கு மாத்திப் போட்டாங்க"
என்று அக்கால பா.உ. மீது பழியைப் போட்டார். நான் அதை நிராகரித்து பா.உ.க்கும் இந்த
மாற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறினேன். இது தான் எமது பிரதேசத்தின்
அரசியல். நல்லது செய்ய முன் வர மாட்டார்கள். மற்றவர்களில் குறை காண்பதில்
சூரர்கள்.
நான் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் 01.01.1976 தொடக்கம் 23.11.1978 வரை கடமையாற்றி விட்டு 23.11.1978 மாலை நேரம் வீடு வந்து சேர்ந்தேன். அப்போது
புயல் வரப் போவதாகப் பலரும் பேசிக்கொண்டார்கள். இரவு 7.00மணிக்குப் பிறகு காற்றின் வேகம்
அதிகரித்தது.சில வீடுகளில் போடப்பட்டிருந்த தகடு/சீட் கூரைகள் பறந்தன, தென்னை மரங்கள் வீடுகளுக்கு மேல் விழுந்து
குலைகள் வீட்டுக்குள் தொங்கின. மழையும் ஆரம்பித்தது.
காலையில் வைத்திய சாலைப் பக்கம் போனேன். அங்கே புதிய பிரசவ
விடுதி கட்டப்பட்டிருந்தது ஆனால் சுற்றி வரக் கட்டப் பட்ட மதில்கள் கீழே விழுந்து
நொறுங்கிக் கிடந்தன.
மறு நாள் சாய்ந்தமருது மருந்தகத்தில் நான் மீண்டும்
வேலையைப் பாரம் எடுத்தபின் புதிய பா.உ. A.R. மன்சூர் அவர்களைச் சந்தித்தேன். அவர் உடனடியாக
உடைந்த எல்லைச் சுவர்களை மீளக் கட்டுவதற்கு சம்மதித்து பிரசவ விடுதியைத்
திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.
அன்று பிற்பகல் திடீரென ஒரு வாகனத்தில் ஆணும் பெண்ணுமாக பல
சிங்கள சகோதரர்கள் வந்திறங்கினர். அவர்கள் சியம்பலாண்டுவ வைத்திய சாலையிலிருந்து
என்னைப் பார்க்க வந்திருந்தனர். முதல் நாள் அடித்த புயலில் நமது ஊர் முற்றாக
அழிந்து விட்டதாக அவர்களுக்கு செய்தி கிடைத்துள்ளது. நன்றி நிரம்பிய இன மத
பேதங்கள் அற்ற உள்ளங்கள்!
1979 ஜூன் மாதம் 26ஆம் திகதி
பிரசவ விடுதி
திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் கௌரவ பா.உ. A.R. மன்சூர்
அவர்களும் புதிய
அம்பாரை மாவட்ட
சுகாதார சேவைகள்
அத்தியட்சகர் Dr. N. பத்மநாதன் அவர்களும்
கலந்து கொண்டனர்.
எனது உறவினரும்
நண்பருமான Dr.Y.A. ஹமீட் ( MBBS) அவர்கள்
எனது அழைப்பை
ஏற்று முதலாவது
தாயை அனுமதித்தார்.
பிரசவ
விடுதி திறக்கப்பட்டு
தாய்மார் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்ட போதும் பல தினங்களாகியும் பிரசவத்திற்கு
எவரும் வருகை
தரவில்லை.
Midwife கடமைக்கு நியமிக்கப் பட்டிருந்த அருளம்மா
மற்றும் அருணகுமாரி
ஆகியோரும் மற்றும்
Attendants கனகலட்சுமி, பரமேஸ்வரி ஆகியோரும்
திறமையானவர்கள் என ஏற்கனவே அறியப்பட்டவர்கள்.
ஆயினும்
பிரசவத்திற்கு வர தாய்மார் தயங்கியதற்கு சில
காரணங்கள் சொல்லப்பட்டன.
அவற்றில் முக்கியமானது
இந்த விடுதி
மையவாடிகளுக்கும் கடலுக்கும் அருகில் இருந்ததே.
எனவே
இந்த பிரசவ
விடுதியின் பாவனையை ஊக்குவிக்க விடுதிக்கு அருகாமையில்
வசித்த முன்னாள்
வன்னிமை அப்துல்
மஜீட் அவர்கள்
முதல் மூன்று
தாய்மார்களுக்கு பரிசு கொடுக்க முன்வந்தார். இத்திட்டம்
வெற்றியளித்து முதல் பிள்ளை முன்னாள் உப
தபாலதிபர் றசீட்
அவர்களின் மனைவிக்குக்
கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தினசரி பிரசவங்கள்
நடந்தன.
இந்த
பிரசவ விடுதி
அம்பாரை மாவட்டத்தின்
கரையோரப் பகுதியில்
அதிக பிரசவம்
நடக்கும் மகப்பேற்று
மனையாக விளங்கியது.
கலவரச்சூழலில் இது பாதுகாப்பான இடமாகத் தென்பட்டதால்
பல ஊர்களிலுமிருந்து
இங்கு பிரவசத்திற்கு
வந்தனர்.ஊர்
மட்டத்தில் ஒரு மாதத்திற்கு 30 பிரசவம் ஆக
இருந்தது பின்னர்
100க்கு மேலானது.
.
பிரசவ
விடுதி திறந்த
பின் பல
சுகாதார கிளினிக்குகளும்
தடுப்பூசிகள் போடுதல் திரிபோஷா போசாக்கு உணவு
விநியோகம் போன்ற
சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கு
1980ம் ஆண்டு துரித நோய்
தடுப்பு திட்டத்தின்
கீழ் குடும்ப
நல சேவையாளர்களாக
இப்பகுதிக்கு நியமிக்கப்பட்டிருந்த மூன்று
சிங்கள யுவதிகளான
Miss. W.G.Grace Metilda, J.M.Sumanawathy, P.V.Nalini ஆகியோரின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை
பேருதவியாகவிருந்தது.
1980இல் வைத்தியசாலை அபிவிருத்தி சபை
இங்கு ஆரம்பித்து
வைக்கப்பட்டது. அதற்கு முதல் இதன் ஸ்தாபக
செயலாளராக செயற்பட்டவர்கள்
மர்ஹூம் M.M.றபீக் ஆசிரியரும் தற்போது ஓய்வு
நிலை தாதி
உத்தியோகத்தர் M.I.M. அபூபக்ககர் அவர்களும்
ஆவர். புதிய
சபையின் உப
தலைவராக ஜும்ஆ
பள்ளிவாசல் தலைவர் M.I.M.மீராலெவ்வை அவர்களும் செயலாளராக
அதிபர் A.M.இப்றாகிம் அவர்களும் பொருளாளராக A.L.M. அன்வர் மரைக்கார் மற்றும் M.Y.A.பாவா
அவர்களும் ஆரம்பத்தில்
தெரிவு செய்யப்பட்டனர்.பிற்காலத்தில் அதிபர்களான
A.U.M.A.கரீம், M.I.A. ஜப்பார்,M.A.M. மீராசாய்வு,
M.I.M.முஸம்மில், தபாலதிபர் KMA ஜப்பார் போன்றோர் முக்கிய
பதவி வகித்தனர்.
இதனைத்
தொடர்ந்து ஒரு
தொண்டர் குழுவும்
அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இக் குழுவில் பின்வருவோர்
ஆரம்பத்தில் இயங்கியவர்கள்.
1. MM. உதுமா லெவ்வை - President
(VTC)
2. மர்ஹூம்
ACM. சபீக் - Secretary
3. MM. உதுமா லெவ்வை - Treasurer
(Rtd.Tr)
4. SMA. லத்தீப் (Rtd. DYSO)
5. S. ஜமால்தீன் (MA) நீதி மன்றம்
6. MHM. றாசிக் (Nursing Officer)
7. KM. ஐயூப் கான் (Nursing
Officer)
8. MIA. மஜீட் (Engineer - Water board)
9. MMA. ஜப்பார்(Draughtsman)
10. ILM. இப்றாகிம் (Rtd. VTC)
11. ASM. அனஸ் (Australia)
12. ASM. அஸ்ஹர்(Quatar)
13. MM. சம்சுதீன்
14. SH. இஸ்ஸதீன்(Tr)
15. SLS. ஜுனைதா (Rtd.Tr)
16. SLS. ஜனூனா(Tr)
17. UK. சபீனா
18. பாதிமா (Rtd.Tr)
19. சித்தி ஜுனைதா
20. சுசீலா (Mid wife)
21. ஞானம்மா(Labour)
22. MM.சமீம் (MA)
23. MY. றபீக்
24. M.M.பாறுக்
25. M.சஹாப்தீன் (Samurthi Officer)
26. வாரிதா (Attendant)
27. பல்கீஸ்
28. M.சேகு முகைதீன்( Diet
Clark-STR)
29. A.L.M. நிசார் (Chest Clinic- STR)
30. A.S.M.அஷ்ரப் (Journalist)
இலங்கையில்
இவ்வாறான சபைகள்
இங்கேயே முதலில்
ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த இரண்டு அமைப்புகளினதும்
செயற்பாடுகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தன. பல
வைத்திய சாலைகள்
இதைப் பின்
பற்றத் தொடங்கின.
1982இல் இங்கு
வந்த சுகாதார
அமைச்சர் இலங்கையில்
எல்லா வைத்திய
சாலைகளிலும் அபிவிருத்தி சபைகளை ஏற்படுத்தப் போவதாகக்
கூறினார்.
எமது
வைத்திய சாலை
அபிவிருத்தி சபையின் ஆரம்ப நடவடிக்கையாக கிளினிக்குகளின்
தேவைக்காக ஒரு
குளிர்சாதனப் பெட்டி பெற்றுத் தந்தது முக்கிய
நிகழ்வாகும்.
தொண்டர்களின்
பங்களிப்பு கலவரச்சூழலில் பெறுமதியாக இருந்தது. அவர்கள்
கிளினிக்குகள் நடாத்த உதவிய தோடு இரவு
நேரங்களில் சுற்று அடிப்படையில் வைத்திய சாலையில்
மணிக்கு ஒரு
முறை மணி
ஓசை எழுப்பி
பாதுகாப்பில் ஈடுபட்டது மறக்கமுடியாத அனுபவம்.
1980ஆண்டு ஆரம்பமானதுடன் ஊரில் பல
பயங்கரவாத அச்சுறுத்தல்களும்
அதற்கு எதிரான
நடவடிக்கைகளும் தலை தூக்கின. வைத்திய சாலையில்
வேலையிலிருந்த Midwife,Attendants உட்பட பல
ஊழியர்கள் மாற்று
இனத்தவர்கள். இவர்களுக்கு மெயின் வீதியிலிருந்து 1 கி.மீ. ஊருக்குள் பயணிக்கவும்
வேண்டும் கடமை
செய்யவும் வேண்டும்.
இவர்களின் பாதுகாப்பை
உறுதி செய்வது
சிக்கலான நேரங்களில்
கூட்டி வந்து
கூட்டிச் செல்லல்
எல்லாமே எனது
பொறுப்பில். இதற்கு மேலாக சில சந்தர்ப்பங்களில்
உள்ளூர் இளைஞர்களின்
சில அச்சுறுத்தல்களிலிருந்தும்
இவர்களைக் காப்பாற்ற
வேண்டியிருந்தது. ஒருமுறை கடமையில் இருந்த Midwife ஒருவரை
கடத்திச் சென்றுவிட்டதாக
நடுநிசியில் அழைப்பு வந்தது. இது ஒரு
பாரதூரமான விடயம்.
உடனே நான்
பிரசவ விடுதிக்குச்
சென்று சம்பவத்தை
உறுதி செய்த
பின் எமது
அபிவிருத்தி சபையின் முக்கிய உறுப்பினர் ஒருவரைத்
தொடர்பு கொண்டு
அவரின் செல்வாக்கு
மூலம் விடுவிக்கப்
பட்டார். இது
போன்று வேறு
சில பிரச்சினைகளும்
அடிக்கடி நடைபெறும்போது
பிரசவ விடுதியைத்
தொடர்ந்து நடத்துதல்
கஷ்டமாக இருந்தது.
ஆயினும் இங்கு
வேலை செய்த
ஊழியர்கள் ஒரு
குடும்பம் போல்
ஒற்றுமையாகவும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தமையால் ஒவ்வொரு
துஷ்ட நிகழ்வில்
இருந்தும் மிக
விரைவில் சுதாகரித்துக்
கொண்டு எழுந்து
நின்றனர். இதனால்
பிரசவ விடுதியின்
செயற்பாடு தங்கு
தடையின்றி நடைபெற்றது.
இவ்வைத்திய சாலையில் மக்களின் நம்பிக்கையும் மேலோங்கிச்
சென்றது.
1982.05.01இல் நான் அம்பாரை மாவட்ட
அபிவிருத்தி சபையின் சாய்ந்தமருது உப அலுவலகத்துக்கு
அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டேன்.அங்கு நான்
கடமையாற்றும் காலத்தில் தோணாவின் கிழக்கே சூறாவளியினால்
சேதமடைந்த பல
பகுதிக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.
1982.06.28ம் திகதி சாய்ந்தமருது வைத்தியசாலையில்
சுகாதார அமைச்சர்
றன்ஜித் அத்தப்பத்து
அவர்க்ளினால் நோயாளர் விடுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு
வேலை ஆரம்பிக்கப்பட்டது.
1985.04.18 ம் திகதி
இவ்விடுதியைத் திறப்பதற்கு சுகாதார அமைச்சருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டது.திறப்பு விழாவைக் கோலாகலமாகச் செய்யவும்
பல ஏற்பாடுகள்
செய்யப் பட்டன.
இந்நிலையில் காரைதீவுக்கும் சாய்ந்தமருதுக்கும்
இடையில் கலவரம்
மூண்டது. சாய்ந்தமருதைச்
சேர்ந்த சிலர்
வெட்டுக் காயங்களுடன்
இவ் வைத்திய
சாலைக்கும் வந்தனர். இவர்களுக்கு வைத்தியம் செய்ய
புதிய விடுதியை
உத்தியோகபூர்வமாக திறப்பதற்கு முன்னரே பாவிக்க வேண்டி
வந்தது.
இக்கலவரத்தின்பின்
ஊரின் முக்கியஸ்தர்
ஒருவர் கைது
செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊரில் இளைஞர் இடையே
காணப்பட்ட பதட்ட
நிலை காரணமாக
அமைச்சர் வருகை
இரத்துச் செய்யப்பட்டது.
ஆயினும்
நோயாளர் விடுதி
திட்டமிட்டபடி1985.04.18ம் திகதி
அமைச்சர் A.R மன்சூரினால் திறந்துவைக்கப்பட்டது
இதைத்தொடர்ந்து
இவ்வைத்தியசாலை
P.U.ஆகத் தரமுயர்ந்தது.
இந்தத் தரமுயர்தலைத்
தொடர்ந்து இங்கு
ஒரு வைத்திய
அதிகாரியை நியமிக்குமாறு
நான் பா.உ. A.R.மன்சூர்
அவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதற்கு அவர்
ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. இன்னும் சில காலத்துக்கு
என்னைத் தொடர்ந்து
இவ்வைத்திய சாலைப் பொறுப்பதிகாரியாக இருக்கும்படி வேண்டினார்.
ஆயினும்
தொடர்ந்து சுகாதார
திணைக்களத்தில் வேலை செய்ய எனக்கு விருப்பம்
இல்லை எனவும்
சேவைக்காலம்
முடியுமுன் ஒய்வு பெறுவதற்குத் தீர்மானித்துள்ளேன் எனவும் கூறினேன்.
இதன்
பின்னர் Dr.A.L.M.நஸீர் (MBBS) அவர்கள் இவ் வைத்தியசாலையின்
பொறுப்பு வைத்திய
அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இக்
காலப்பகுதியில் எனது வேண்டுகோளுக்கிணங்க சா.ம.வைத்தியசாலை வளவில்
ஹாஜியானி பாதுமுத்து
ஹலால்தீன் அவர்கள்
ஞாபகார்த்தமாக அவருடைய மகன் அக்பர் அவர்கள்
இஸ்லாமிய கலாசார
நிலையம் ஒன்றை
அமைத்து அன்பளிப்புச்
செய்தார்.
இது
கட்டடக்கலைஞர்
M.I.M .இஸ்மாயில் அவர்களினால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டது
இக்கட்டடம்
முன்னாள் அமைச்சர்
கேட் முதலியார்
M.S..காரியப்பர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. (இது
தற்போது பள்ளிவாசலாக
இயங்குகிறது)
1985.08.23 இல் நான்
ஹஜ்முடித்து வந்தபின் சேவையில் இருந்து ஓய்வு
பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். இச்
சந்தர்ப்பத்தில் Dr. S.M. கியாஸ் அவர்களும்
பின்னர் Dr.S.A.R.M.மௌலானாவும் இங்கு
பதில் கடமையில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
1986ம் ஆண்டின் ஆரம்பத்தில்
எனது
மனைவியின் சகோதரியான
Dr. லத்தீபாவும் இங்கு கடமையாற்ற நியமிக்கப்பட்டார்.
1986.09.01 இல் Dr. S.நஜிமுதீன்(MBBS)
இவ்வைத்திய சாலையின் பொறுப்பதிகாரியாகக்
கடமையேற்றார்.
எனக்கு
கல்முனைக்குடி மருந்தகத்திற்கு 01.01.1987 தொடக்கம்
மாற்றம் கிடைத்தது.
30.12.1986இல் சாய்ந்தமருது கடற்கரை ஆஸ்பத்திரியிலிருந்து
விடை பெற்றேன்.
அத்தினத்தில்
வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் செயலாளர் அல்
ஹாஜ் A.M.இப்றாகிம்
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க
அங்கு நடைபெற்ற
சம்பிரதாய பிரியாவிடையிலும்
கலந்து கொண்டேன்.
நமதூரில்
ஒரு வைத்தியசாலை
உருவாகுவதற்கும் அதற்கு ஒரு பட்டதாரி வைத்தியர்
(MBBS) பொறுப்பதிகாரியாகுவதற்கும் தோணாவின் கிழக்குப்பகுதியில்
வாழ்ந்த மக்களின்
வாழ்வில் மறுமலர்ச்சி
ஏற்படுவதற்கும் நான் கால் கோளாக இருந்தேன்
என்ற திருப்தியில்
வெளியானேன்.
நான்
சாய்ந்தமருது வைத்திய சாலையை விட்டுப் பிரிந்தபோதும்
அதன் முன்னேற்றத்திலும்
அப்பகுதியின் அபிவிருத்தியிலும் அக்கறையாகத்தான்
இருந்தேன்.
பெரிய
பள்ளிவாசல் தலைவராக இருந்தபோது சுனாமியின் பின்னரான
நடவடிக்கைகளில்
JiCA நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட
கல்முனை நகர
புனரமைப்பு தொடர்பான கூட்டங்களில் கலந்து கொண்டபோது
தோணாவை அபிவிருத்தி
செய்வதற்கான பாரிய திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்கு
காரணமாக இருந்தேன்.
ஆயினும் நமதூர்
அரசியல் வாதிகள்
அதில் அக்கறை
செலுத்தவில்லை. பின்னர் நல்லாட்சி அரசில் 100 நாள்
வேலைத்திட்டத்தில் அதனைச் செய்யத்
தூண்டியபோது அதனை அவர்களின் எடுபிடிகள் உழைப்பதற்கான
வேலைத்திட்டமாக்கினார்கள். குறைந்த பட்சம்
வைத்திய சாலை
வீதியில் உள்ள
பாலம் கூடப்
போடப்படவில்லை. வைத்திய சாலை வீதியை கடற்கரை
வீதிவரை கொண்டு
செல்வதற்கான ஏற்பாடுகளையும் நானே முன்னின்று செய்தேன்.
தாமரை
மைதானத்தைக் கூறு போடாது கடற்கரை ஓரம்
இருந்த வைத்திய
சாலையையும் பாடசாலையையும் அதே இடத்திலேயே புதிதாகக்
கட்டுவது சிறந்தது
என்றே பள்ளிவாசல்
நிர்வாகத்தின் முக்கியஸ்தர்கள் கருதினோம்.
அமைச்சர் பேரியல்
அஷ்ரப் மற்றும்
விளையாட்டுக் கழகங்களின் முக்கியஸ்தர்களும்
இதே நிலைப்பாட்டிலேயே
இருந்தனர்.இது
தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன்
சில கலந்துரையாடல்களும்
நடைபெற்றன. ஆயினும் அரசியல் பின்னணியோடு இயங்கிய
சில இளைஞர்கள்
வைத்திய சாலையையும்
பாடசாலையையும் இடம் மாற்றுவதில் மும்முரமாக இருந்தனர்.
இதன் காரணமாக
புதிய வைத்திய
சாலை கட்டுவதற்கான
முயற்சியில் பெரிய பள்ளிவாசலும் ஈடுபட வேண்டியிருந்தது.
ஆயினும்
மல்ஹருஸ் ஸம்ஸ்
இருந்த இடத்தில்
வேறு பெயரில்
தற்போது பாடசாலை
இயங்குகின்றது. அதேபோல் கடற்கரை ஆஸ்பத்திரி இருந்த
இடத்தில் ஒரு
புதிய வைத்திய
சாலையை அல்லது
ஒரு முதியோர்
நலன்புரி நிலையத்தையாவது
கட்டுவிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் என்
மனதில் தொடர்ந்து
இருந்து கொண்டே
இருக்கின்றது.
தற்போது
அங்கு அமைந்திருக்கும்
பிராந்திய மருந்துக்
களஞ்சியத்தை வேறு இடத்துக்கு மாற்றி அவ்விடத்தில்
ஒரு முதியோர்
நலன்புரி நிலையம்
அமைக்க முடியுமா
என்று சிந்திக்க
வேண்டியது காலத்தின்
தேவை.
முற்றும்!
0 comments:
Post a Comment