கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின்
ஸ்தாபக அதிபர் அல்ஹாஜ் எம்.ஸி.ஏ. ஹமீத்
நேர்மையான உதாரண புருஷர்.
இன்று அன்னாரின்
இரண்டாண்டு நினைவு தினமாகும்
கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் ஸ்தாபக அதிபர் மர்ஹும்
அல்ஹாஜ் எம்.ஸி.ஏ. ஹமீத் அவர்கள்
சாய்ந்தமருதில் 1926.02.20 ஆம் திகதி பிறந்து 2018.05. 14 ஆம் திகதி மாலை காலமானார்கள்.
மர்ஹும் எம்.ஸி.ஏ. ஹமீத் அவர்கள் நற்பண்புகளையுடையவர்,
மக்களுடன் அமைதியாகப்
பேசி அன்பாகப் பழக்ககூடியவர். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளைக் கடமையுணர்வுடன்
மிகச் சிறப்பாக செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்.
இவர் சாய்ந்தமருது அல் – ஜலால் வித்தியாலயம், சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஸம்ஸ் வித்தியாலயம்
ஆகியவற்றில் அதிபராகச்செயல்பட்டு இப்பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு
அரும்பணியாற்றியவர்.
கல்முனைப் பிரதேசத்தில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு என
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அமைக்கப்பட்டு அக்கல்லூரியின் ஸ்தாபக அதிபராக 1971.
01. 05 ல் நியமிக்கப்பட்டார்.
சிறப்பான முறையில் சேவையாற்றிய இவர் தொடர்ச்சியாக 13 வருட சேவையின் பின் 1984.02.20 ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
கல்முனை பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களின் கல்வி
உயர்ச்சிக்காக அரும்பாடு பட்டு உழைத்தவர். இவர் எடுத்த முயற்சிகள் இன்று
இப்பிரதேசத்தில் ஏழை, எளிய
குடும்பங்கள் பெண்களின் கல்வி முன்னேற்றத்தால் சிறப்பாக வாழ்வதற்கு உதவி
புரிந்துள்ளதை சிந்திப்பவர்களால் ஒரு போதும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
கல்முனை ஸாஹிறாக் கல்லூரி உருவாக்கத்தில் அக்கல்லூரியின்
ஸ்தாபகரான மர்ஹும் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பருடன் முன்னின்று உழைத்த பிரமுகர்களில்
மர்ஹும் எம்.ஸி.ஏ.ஹமீது அவர்கள் முதன்மையானவராக இருந்தார்.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவராகவும் பொருளாளராகவும் இருந்து இவர் சிறப்பாக சேவையாற்றியவர்.
இவர், சாய்ந்தமருது கிராம முன்னேற்றச் சங்கம், சமாதான சபை,சன சமூக நிலையம், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், சிரேஷ்ட பிரஜைகள் சபையின் தலைவர் மற்றும்
விவசாயக் குழுக்கள் போன்ற அமைப்புக்களில்தலைவராகவும் கல்முனை பிரதேச சிவில்
பாதுகாப்பு பிரிவின் உப தலைவராகவும் பதவிகள் வகித்து சிறப்பாகச் சேவையாற்றியவர்.
எம்.ஸி.ஏ. ஹமீத் அவர்கள் கல்வி,சமூக, சமய கலாசார சேவைகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றியமையைக்
கருத்தில் கொண்டு சர்வோதய தலைவர் ஏ.ரி ஆரியரத்ன அவர்களின் தலைமையில் கல்முனை
பாத்திமாக் கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் இவர் கெளரவிக்கப்பட்டு
பாராட்டப்பட்டார்.
அன்னாரின் சேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு
அன்னாருக்கு நன்மைகளை வழங்குவானாக. ஆமீன்.
ஏ.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்.
0 comments:
Post a Comment