கொரோனா வைரஸ் தாக்கி
டாக்டர்களான தந்தையும், மகளும் பலி
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கியத்தில் டாக்டர்களான
இந்திய தந்தையும், மகளும் பரிதாபமாக
உயிரிழந்தனர். மருத்துவத்துக்காக தன்னையே அர்ப்பணித்த குடும்பம் என நியூஜெர்சி
மாகாண கவர்னர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நாட்டில் கொலைகார கொரோனா வைரஸ் தாக்கி
பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 76 ஆயிரத்தை கடந்தது.
நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருவதால்
அவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட போதிய இடம் இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டு,
உடல்கள் பல நாட்களாக
குளிரூட்டப்பட்ட லாரிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள்
பதைபதைக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த டாக்டர்களான ஒரு தந்தையும்,
மகளும் கொரோனா வைரசுக்கு
அங்கு களப்பலியாகி இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் கிளன் ரிட்ஜ் என்ற
இடத்தில் டாக்டராக இருந்து வந்தவர், சத்யேந்தர் தேவ் கன்னா (வயது 78). இவர் டெல்லியில் 1964-ம்
ஆண்டு, மவுலானா ஆசாத்
மருத்துவ கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். பின்னர் அவர்
அமெரிக்காவில் குடியேறினார். இவர் அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் பல்வேறு
ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை துறைகளின் தலைவராக பணியாற்றி உள்ளார்.
இவரது மகள் டாக்டர் பிரியா கன்னா (43). இவர் உள்மருத்துவம்
மற்றும் சிறுநீரக மருத்துவம் ஆகிய இரண்டிலும் நிபுணர் ஆவார்.
ஆர்.டபிள்யு.ஜே. பர்னபாஸ் சுகாதார அமைப்பின் (யூனியன்
ஆஸ்பத்திரி) உறைவிட தலைமை மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இவர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தாக்கி, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை
பலனின்றி பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
இதுகுறித்து நியூஜெர்சி மாகாண கவர்னர் பில் மர்பி
டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
டாக்டர் சத்யேந்தர் தேவ் கன்னா மற்றும் டாக்டர் பிரியா
கன்னா ஆகியோர் தந்தை, மகள் ஆவர்.
அவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே தங்கள் வாழ்க்கையை
அர்ப்பணித்தவர்கள். இந்த குடும்பம், உடல் நலம் மற்றும் மருத்துவத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு
குடும்பம். இவர்களது மறைவுக்கு வார்த்தைகளால் இரங்கலை வெளிப்படுத்தி விட முடியாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
டாக்டர் சத்யேந்தர் தேவ் கன்னாவின் மகள் டாக்டர் பிரியா
கன்னா, நியூஜெர்சி
மாகாணத்தில் படித்து டாக்டர் ஆனவர். தனது தந்தையைப் போலவே அவரும் கிளாரா மாஸ்
மெடிக்கல் சென்டரில்தான் பணியாற்றி வந்தார். அவரும் தான் பணியாற்றிய
ஆஸ்பத்திரியிலேயே உயிரிழந்துள்ளார்.
இவர் அடுத்த தலைமுறை டாக்டர்களுக்காக எஸ்செக்ஸ் கவுண்டியில்
2 டயாலிசிஸ் மையங்களில் வகுப்பு எடுத்தவர் என்று கவர்னர் பில் மர்பி தனது இரங்கல்
செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment