ரஷிய ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து
- கொரோனா நோயாளிகள்
5 பேர் உடல் கருகி பலி
ரஷியாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கொரோனா நோயாளிகள் 5 பேர் உடல் கருகி பலியாகினர்.
ரஷியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் குறைவான கொரோனா நோயாளிகளை கொண்ட 2-வது நாடாக ரஷியா இருந்தது.
ஆனால் தற்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. கொரோனாவால் மிக மோசமாக பாதிப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷியா 3-வது இடத்தில் இருக்கிறது.
ரஷியாவில் இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பலி எண்ணிக்கை 2,100-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது.
ரஷியாவில் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கி வருகிறது. இதனால் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பயங்கர தீவிபத்து நேரிட்டது.
கொரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்க பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர் கருவியில் மின்கசிவு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் தீப்பற்றி எரிய தொடங்கியது.
மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இது பற்றி தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன்னதாக ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் நோயாளிகள் என 150-க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
ரஷியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்தும் வரும் நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஊரடங்கில் சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment