இன்று சர்வதேச குடும்ப தினம்
ஒவ்வொருவரும் தனது குடும்பத்துக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் நோக்கத்துடன் ஐ.நா., 1994ம்
ஆண்டிலிருந்து மே 15ம் திகதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.
சமூக கட்டமைப்பின் ஒரு சிறிய உருவாக்கம் குடும்பம். மேலும்
குடும்ப அமைப்பு என்பது சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். ஒரு குடும்ப
அமைப்பானது ஒரு தனி நபரின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான பாதுகாப்பான
சூழ்நிலையை வகுத்துக் கொடுக்கிறது. மேலும் வாழ்நாள் முழுக்க ஒரு ஆதரவைத் தருகிறது.
1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள
குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான
அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
உலகின் பல்வேறு
பகுதிகளில் உள்ள குடும்ப அமைப்பின் ஸ்திரத்தன்மையையும் கட்டமைப்பையும் பாதிக்கும்
மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச
குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சமூகத்தின் முக்கிய அங்கமாக மற்றும்
மத்திய அங்கமாக இருப்பது குடும்ப அமைப்பு என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தினம்
கொண்டாடப்படுகிறது
சர்வதேச குடும்ப தினத்தை கொண்டாட இரண்டு முக்கிய காரணங்கள்
உண்டு. குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு மற்றும்
இந்த அமைப்பை எதிர்மறையாக பாதிக்கும் பல்வேறு பாதிப்புகள். குடும்ப அமைப்பு என்பது
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகத்தின் ஒரு முக்கிய சக்தியாக உறுதி செய்யப்படுகிறது.
பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் பற்றியும், அந்த பாதிப்பை
சரிசெய்ய தனி நபர், சமூகம் மற்றும் அரசு எடுக்கும் நடவடிக்கைகள்
குறித்தும் இந்த நாளில் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. வலிமைமிக்க குடும்ப
அமைப்பு ஒரு சமூகத்தையும் நாட்டையும் எந்த வகையில் வலிமையடைய உதவுகிறது என்பதையும்
இந்த தினம் வெளிப்படையாக உணர்த்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக அமைதி கூட்டமைப்பு ஆகியவை
இந்த கொண்டாட்டத்திற்கு பின் இருந்து செயல்படும் நிறுவனங்களாகும். பல்வேறு நாடுகள்
இந்த நிறுவனத்திற்கு பக்க பலமாக இருந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுக்கின்றன.
உலகில் இடம்பெயர்ந்தோர், குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற
நோக்கத்துடன் இந்த ஆண்டு இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 21,40,00000 பேர் வாழ்வாதரத்திற்காக வெளிநாடுகளுக்கு இடம்
பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பங்களுடைய வாழ்க்கை இவர்களை சார்ந்து உள்ளன. என்ன
தான் இவர்கள் தங்களுடைய குடும்பத்திற்கு வருமானமோ அல்லது பாசத்தையோ அங்கிருந்து
அளித்தாலும், அருகில் இல்லாதது
அவர்களது குடும்பங்களுக்கு ஒருவித ஏமாற்றமாகவே இருக்கும்.
எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும் யாரும் தனது குடும்பத்தை
கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள் பற்றி குடும்பங்களின்
பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment