பாகிஸ்தான் விமான விபத்து;
பைலட்டின் தவறுதான் காரணமா?

பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்துக்கு, பைலட் செய்த தவறு காரணமாக இருக்கலாம் என, முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, பாகிஸ்தானில், ஒரு மாதத்துக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது; உள்ளூர் மற்றம் சர்வதேச விமான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ரமலான் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்காக, உள்ளூர் விமான சேவை, கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி..., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். இந்த விபத்து பற்றி விசாரித்த பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை, தன் முதல் கட்ட விசாரணை அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, விமானத்தை உடனடியாக தரையிறக்க, பைலட் முடிவு செய்து, கராச்சி விமான நிலையத்தில், அனுமதியும் பெற்றார். விமானத்தை தரையிறக்க பைலட் முயற்சித்த போது, இன்ஜினிலிருந்து நெருப்பு பொறிகள் பறந்துள்ளன. இதையடுத்து, விமானத்தை தரையிறக்க முடியாமல், வானத்தை நோக்கி பைலட் செலுத்தியுள்ளார். அப்போது தான், விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தை பைலட் சரியாக கையாளாதது தான், விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், விமானத்தை தரையிறக்க முடியாமல் போனதை, கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காமல், விமானத்தை மேலே செலுத்த, பைலட் முடிவு செய்ததும், அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான விசாரணைக்கு பின், உண்மையான காரணம் தெரியும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான விபத்து ஏற்பட்டதையடுத்து, உள்நாட்டு விமான சேவையை, பி..., நிறுத்தியுள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top