நாடாளுமன்றக் குழப்பம்
– 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு பரித்துரைத்துள்ளது.

கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஏற்படுத்திய குழப்பம், அதையடுத்து இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரிக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை சபாநாயகர் கரு ஜெயசூரிய நியமித்திருந்தார்.

இந்தக் குழு  கடந்த செவ்வாய்க்கிழமை தமது அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது,

இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமல் ராஜபக்ஸ, சந்திரசிறி கஜதீர ஆகியோர், குழுவின் விசாரணைகளில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

ஏனைய குழு உறுப்பினர்கள் நடத்திய விசாரணைகளின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாமன்ற விதிகள் (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தை மீறியுள்ளனர்  என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ள 59 உறுப்பினர்களில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 54 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஜேவிபி உறுப்பினர் ஒருவரும் அடங்கியுள்ளனர்.

இந்த அறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மீது அதிகளவில், 12 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, பத்ம உதயசாந்த ஆகியோருக்கு எதிராகவும் அதிகளவு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

குழப்பங்கள் நடந்த போது, எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிளகாய்தூள் வீசியது, சபாநாயகரின் ஆசனத்தில் நீர் ஊற்றியது, பொலிஸாரை தாக்கியது, கத்தி போன்ற பொருட்களைப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.

மூன்று நாள் குழப்பங்களின் போது, 325,000 ரூபா சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

இந்த அறிக்கை சபாநாயகரின் ஆய்வுக்குப் பின்னர் மேல் நடவடிக்கைகள் எடுப்பதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top