வடக்கில் இராணுவத்தினரால் 
மற்றுமொரு தொகுதி
காணிகள் மக்களிடம் கையளிப்பு

வவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (22) முற்பகல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய காணிவிடுவிப்பிற்கான பத்திரத்தை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கையளித்தார்.அதனை ஆளுநர் வவுனியா அரசாங்கஅதிபர் .எம்.ஹனீபாவிடம் கையளித்தார்.

இதனடிப்படையில் வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 40.74ஏக்கர் அரச காணிகளும் 13.64ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264ஏக்கர் தனியார் காணிகளும் இராணுவத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099ஏக்கர் அரச காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற தேசிய போதைத்தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் அந்தக் காணிகள் வடக்கு ஆளுநர் ஊடாக மாவட்ட செயலாளர்களிடம் கையளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top