கிண்ணியா, கங்கை கண்டக் காட்டு பாலத்துக்கருகில்,
ஆற்றுக்குள் பாய்ந்த இருவரின் சடலங்களும் மீட்பு

விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து, கிண்ணியா, கங்கை கண்டக் காட்டு பாலத்துக்கருகில், ஆற்றுக்குள் பாய்ந்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா, இடிமன்  பகுதியைச் சேர்ந்த 23 வயதான முஹம்மது ரபீக் பாரிஸ், 18 வயதான முகம்மது பசீர் றமீஸ் ஆகியோரே, இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் முதலாம் நபரின் சடலம், நேற்றிரவு 7 மணியளவிலும் இரண்டாம் நபரின் சடலம், இன்று மதியம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான மணல் குவிப்பில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டியடிப்பதற்காக, விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டையடுத்தே, ஆற்றுக்குள் மூவர் குதித்துள்ளனர். அவர்களில் ஒருவர், நீந்திக் கரையேறி தப்பியோடிவிட்டாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிண்ணியாவில் மணல் குவித்தவர்களை, நேற்று சுற்றிவளைக்க முற்பட்ட போது, ஏற்பட்ட மோதல்களில் கடற்படை வீரர்கள் 12 பேர் காயமடைந்துள்ளனரென கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார, தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவங்களை அடுத்து அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டமையால், இன்றும் (30) அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top