வங்காள தேசத்தில்  ஜமாஅத் கட்சி தலைவர்
அசாருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை



வங்காள தேசத்தில் ஜமாஅத் இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் .டி.எம். அசாருல் இஸ்லாம் (வயது 62). 1971-ம் ஆண்டு, அந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, கொலைகள், சித்ரவதைகள், கற்பழிப்புகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்ததாக அசாருல் இஸ்லாம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை டாக்காவில் உள்ள சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் விசாரித்தது.
விசாரணை முடிவில், அசாருல் இஸ்லாம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கருதிய நீதிபதி இனாவத்தூர் ரகீம் தலைமையிலான அமர்வு, அவருக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 158 பக்கங்களை கொண்ட தீர்ப்பில், ராங்பூரில் 1,200 க்கும் மேலான மக்களை படுகொலை செய்த அசாருல் இஸ்லாமை மரணம் அடையும் வரையில் தூக்கில் போடும்படி கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் போர்க்குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 16-வது நபர் என்ற பெயரை அசாருல் இஸ்லாம் பெறுகிறார்.

அசாருல் இஸ்லாமின் வக்கீல் பேசுகையில், "போர் நடந்தபோது அசாருல் இஸ்லாம் 19 வயது மாணவர், அவர் போர்குற்றத்தில் ஈடுபட எந்தஒரு வழியும் இல்லை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானது மற்றும் ஜோடிக்கப்பட்டது," என்று கூறியுள்ளார். இதற்கிடையே தீர்ப்புக்கு எதிராக, ஜமாத் இஸ்லாமி கட்சி இரண்டு நாட்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top