இந்தோனேசியாவில் 10 வயது.. 190 கிலோ எடை..
கடும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியால்
மீண்டு வந்த உலகின் மிகப்பெரிய குண்டு சிறுவன்

இந்தோனேசியாவில் 190 கிலோ எடையுடன் முடங்கிக் கிடந்த சிறுவன், கடும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் பாதி எடையைக் குறைத்து சாதித்துக் காட்டியுள்ளான்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ளது சிபுர்வசரி குக்கிராமம். இங்கு வசிப்பவர் அதி சோமந்திரி (47). இவரது மனைவி ரொகாயா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள். அவர்களில் ஒருவன் ஆர்யா பெர்மனா. பத்து வயதில் 190.5 கிலோ. இதனாலேயே இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவன் என்று ஊடகங்களில் பிரபலமானான்.

ஒரு நாளைக்கு 5 வேளை சாப்பிடுவான். சாதம், மீன், மாட்டிறைச்சி, காய்கறி சூப் என்று எல்லாவற்றையும் சாப்பிடுவான். அதுவும் 2 ஆண்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுவார்களோ, அந்தளவுக்கு சாப்பிடும் பழக்கம் உள்ளவன் ஆர்யா. உடல் எடை அளவுக்குமேல் அதிகமானதால் நிற்க முடியாது. தரையில்தான் படுத்து கிடந்தான். பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. அவனுடைய பருமனுக்கு ஏற்ற ஆடையும் இல்லை.

வீட்டிலேயே சுகபிரசவத்தில் பிறந்தவன்தான் ஆர்யா. மற்ற குழந்தைகளைப் போலவே அப்போது அவனது எடையும் இருந்தது. ஆனால், 2 வயதுக்கு மேல் ஆர்யாவின் எடை கூடிக்கொண்டே சென்றது. மகனைக் காப்பாற்ற அந்தக் குக்கிராமத்தில் இருந்த டாக்டர்களை எல்லாம் அழைத்து வந்து பெற்றோர் காட்டினார்கள். அவர்களும் ஆர்யாவை பரிசோதித்தனர். ஆனால், அவனிடம் எந்த குறைபாட்டையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனது எடை அதிகரிப்பு டாக்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

கடைசியில் டாக்டர்கள், உணவியல் வல்லுநர்களின் அறிவுரைப்படி இனிப்பு, இனிப்பு கலந்த குளிர்பானங்கள், சர்க்கரை சேர்த்த உணவு வகைகளை ஆர்யாவுக்கு தவிர்த்தனர். அத்துடன் கடும் உடற்பயிற்சியும் அவனுக்கு சொல்லி தந்தனர். அதற்கு அவனும் ஒத்துழைத்தான்.

தற்போது ஆர்யா பெர்மனாவுக்கு வயது 12. இரண்டு ஆண்டு கடும் போராட்டம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் தற்போது 95 கிலோ எடையைக் குறைத்து சாதித்துவிட்டான். கடந்த ஏப்ரல் மாதம் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் ஆர்யாவுக்கு செய்யப்பட்டது. அதன்பிறகு 3 வாரங்களில் அவனது எடை கணிசமாகக் குறைந்தது.

தற்போது நன்றாக நடக்கிறான். நன்றாக படித்து வந்த ஆர்யா, எடை அதிகரிப்பால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தற்போது 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கிவிட்டான்.

சுறுசுறுப்பாக இருக்கிறான், நண்பர்களுடன் பேட்மின்டன், கால்பந்து ஆடுகிறான். தினமும் 3 கி.மீ. தூரம் நடை பயிற்சி மேற்கொள்கிறான். பழைய டி ஷர்ட்டை அணிந்து கொள்கிறான். மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகிக் கொண்டான்.

‘‘இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நடக்கிறேன், விளையாடுகிறேன். கால்பந்தாட்டம்தான் எனது விருப்பம். தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை. லிவர்பூல் எப்சி கிளப்தான் எனக்கு பிடித்தமானது. ராபர்ட்டோ பிர்மினோதான் எனக்கு பிடித்த கால்பந்தாட்ட வீரர். அவரை போல நான் விளையாட விரும்புகிறேன்’’ என்கிறான் ஆர்யா.

தந்தை அதி சோமந்திரி கூறும்போது, ‘‘முன்பெல்லாம் அவன் தூங்க மிகவும் கஷ்டப்பட்டான். அதிக எடையால் மூச்சுத் திணறலால் தவித்தான். இப்போது நன்றாக தூங்குகிறான். இரவு 10 மணிக்கு தூங்க சென்றுவிடுவான். ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரவு 11 அல்லது 12 மணி வரை விழித்திருக்க அனுமதிப்போம். மற்ற குழந்தைகளை போல எனது மகனும் பள்ளிக்கு செல்ல தொடங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

ஆர்யாவின் எடை குறைப்புக்குப் பின்னால் அவனது தாயும் தந்தையும் பட்ட கஷ்டங்கள் அதிகம். அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடம் எல்லாம் கடன் வாங்கி, ஆர்யாவைக் காப்பாற்றி உள்ளனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top