ரஷியாவில் இடிபாடுகளுக்குள் சிக்கி
35 மணி நேரம் தவித்த குழந்தை 
உயிருடன் மீட்பு

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 35 மணி நேரம் சிக்கி தவித்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

ரஷியாவில் மேக்னி டோகோர்ஸ் நகரில் உள்ள 10 மாடி குடியிருப்பு இடிந்தது. அதில் இருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட கியாஸ் கசிவால் இந்த விபத்து நிகழ்ந்தது.

அதில் 48 வீடுகள் சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இன்னும் 36 பேரை காணவில்லை. காயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மீட்கப்பட்ட உடல்கள் போர்வையில் சுற்றி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். மேக்னி டோகோர்ஸ்க் நகரில் தற்போது மைனஸ் 17 டிகிரி குளிர் நிலவுகிறது. அதை பொருட்படுத்தால் குழுவினர் இடிபாடுகளை அகற்றி கொண்டிருந்தனர்.

அப்போது இடிபாடுகளுக்கு இடையே குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதன் பின்னர்தான் 11 மாத ஆண் குழந்தை உயிருடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தலையில் பலத்த காயம் இருந்தது. குழந்தையை மீட்ட குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

விபத்து நடந்து 35 மணி நேரத்துக்கு பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. குழந்தையின் உடலை படுக்கை சுற்றியிருந்ததால் உயிர் பிழைத்துள்ளது.

இதை அறிந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இடிந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கூடினர். 35 மணி நேரமாக கடுங்குளிரில் தவித்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையை ஆவலுடன் பார்த்தனர். பின்னர் அக்குழந்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த குழந்தையின் தாய் விபத்தில் இருந்து தப்பினார். அவர் உயிருடன் இருக்கிறார். குழந்தை மீட்கப்பட்டதை அறிந்த அவர் ஆவலுடன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top