இரும்பு திருடர்களின் துணிச்சல்
சீனக்குடா எண்ணெய் தாங்கிகளிலும் கைவரிசை

திருகோணமலை சீனக்குடாவில் உள்ள பிரித்தானியர் காலத்து எண்ணெய்த் தாங்கிகள் இரண்டை, இரும்புத் திருடர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

1930ஆம் ஆண்டு, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் சீனக்குடாவில் 101 எண்ணெய்த் தாங்கிகள் அமைக்கப்பட்டன.

1964ஆம் ஆண்டு, இந்த எண்ணெய்த் தாங்கிகளை, 250,000 பவுண்டுகளைக் கொடுத்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது உரிமையாக்கிக் கொண்டது.

1964ஆம் ஆண்டு தொடக்கம் இந்த எண்ணெய்த் தாங்கிகளின் உரிமையை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொண்டுள்ள போதும், அவை அமைந்துள்ள நிலத்துக்கான உரிமை, அதனிடம் இல்லை.

இந்த எண்ணெய்த் தாங்கிகளில், 85 மேல்நிலைத் தாங்கிகளாகவும், 14 கீழ்நிலைத் தாங்கிகளாகவும் உள்ளன.

2003ஆம் ஆண்டு இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு 35 எண்ணெய்த் தாங்கிகளை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

இதுதொடர்பான முறையான உடன்பாடு கையெழுத்திடப்படாவிடினும், இந்தியன் ஓயில் நிறுவனம் இவற்றைப் பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்தியன் ஓயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு தாங்கிகளின் அடிப்பகுதியை, இரும்பு வெட்டப் பயன்படுத்தப்படும் கருவிகளால் வெட்டி, இரும்புத் துண்டங்களை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மிக கனமான இருந்த இரும்புத் துண்டங்கள் அகற்றப்பட்டதால், இரண்டு தாங்கிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 10 பேரை சீனக்குடா பொலிஸ் கைது செய்துள்ளது.

இந்தியன் ஓயில் நிறுவனத்தின் அலட்சியத்தினாலேயே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top