நோன்பு காலத்திலும் முஸ்லிம் பாடசாலைகள் திறப்பு
மேல் மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில்
பரீட்சாத்தமாக செயற்படுத்துவதற்கு திட்டம்
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.



முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு காலங்களிலும் இயங்கும் வகையில் பொதுவான நேரசூசிக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் பரீட்சாத்தமாக இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.
தம் பிள்ளைகள் சிறந்த, நாட்டுக்குப் பயனுள்ளவர்களாக வரவேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரினதும் எதிர்பார்ப்பு என்ற வகையில் இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகம் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்தில் வாழும் முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் குறிப்பிட்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் கல்வி அமைச்சராக பந்துல குணவர்தன இருக்கும் போது, கொழும்பு முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைக்கு தீர்வொன்றை முன்மொழிந்தேன். நோன்பு காலங்களிலும் முஸ்லிம் பாடசாலைகள் நடைபெற வேண்டும் என்பதே அது. சவூதி அரேபியா உட்பட அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் நோன்பு காலத்தில் பாடசாலைகள் நடைபெறுகின்றன.
நோன்பின் தாத்பரியத்தைப் பார்க்கும் போது நாம் தினமும் மேற்கொள்ளும் வேலைகளில் இருந்து நோன்பைக் காரணம் காட்டி ஒதுங்கிவிட முடியாதென்பதாகும். தினமும் மேற்கொண்ட வேலைகளை நோன்பிலும் மேற்கொண்டால் தான் நோன்பின் பயன்களை பூரணமாக அடைந்துகொள்ளலாம்.

வெறுமனே நோன்பை பிடித்துக்கொண்டு தூங்கிக் கழித்தால் பயனில்லை. அது இன்று பெற்றோருக்கும் தொந்தரவாக அமைந்துள்ளது. நோன்பிலும் முஸ்லிம் பாடசாலைகளைத் திறக்க எடுத்த முயற்சி இறுதி நேரத்தில் இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீட்டால் இல்லாமல் போனது. அவர்களில் ஒருவர் மரணித்துவிட்டார்.  முஸ்லிம் சமூகம் குழப்பமடைந்து விடுவார்கள் என்பதே அவர்களின் பதிலாக அன்று இருந்தது.

உண்மையில் இவ்விடயத்தில் சமூகம் குழப்பமடைவதற்கு ஒன்றுமே இல்லை. தம் பிள்ளைகள் சிறந்த, நாட்டுக்குப் பயனுள்ளவர்களாக வரவேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாகும். அதற்கு முறையான கல்வி அவசியம். அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கு தரமான ஆசிரியர்கள் கிடைப்பதே இல்லை. ஏனெனில், சிங்கள, தமிழ் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வருவதை விரும்புகிறார்கள் இல்லை. அதற்குக் காரணமாக அவர்கள் தெரிவிப்பது, நோன்பில் பாடசாலை விடுமுறை வழங்கப்படுகின்றது என்பதாகும்.

ஏனைய பாடசாலைகளின் விடுமுறையின் போது முஸ்லிம் பாடசாலைகள் இயங்குகின்றன. அவர்களின் குழந்தைகளுக்கு பாடசாலை விடுமுறையாக இருக்கும் போது அவர்கள் முஸ்லிம் பாடசாலைக்கு வந்து கற்பிக்க நேரிடுகின்றது. இதனைத் தீர்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது சில இடங்களில் சாதாரண தர, மற்றும் உயர்தர வகுப்புக்கள் நோன்பில் நடைபெறுகின்றது. அதனை முழுமையாக செயற்படுத்தவுள்ளேன் என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top