குடும்பத்திடம் இருந்து தப்பி வந்த

சவூதி பெண்ணுக்கு
கனடா தஞ்சம்



தனது குடும்பத்திடம் இருந்து தப்பி வந்து பாங்கொக்கில் நிர்க்கதியாகி இருந்த சவூதி அரேபிய பெண்ணுக்கு கனடா தஞ்சம் வழங்கியதை அடுத்து அவர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். 

18 வயதான ரஹப் முஹமது அல் குனூனி என்ற அந்த யுவதி பாங்கொக் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றதோடு, ஆரம்பத்தில் குவைட்டில் இருக்கும் தனது குடுப்பத்தினரிடம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

எனினும் குவைட் திரும்ப மறுத்து பாங்கொக் விமானநிலைய அறையில் தம்மை பூட்டிக்கொண்டது, சர்வதேச அவதானத்தை ஏற்படுத்தியது. தான் இஸ்லாத்தை துறந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இது சவூதியில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும். 

மிக தைரியம் கொண்ட கனடாவின் புதிய பிரஜைஎன்று இந்த யுவதியை கனடா வெளியுறவு அமைச்சர் வரவேற்றார். 

ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய அல் குனூனிக்கு புகலிடம் வழங்கப்பட்டதாக கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடியோ முன்னதாக அறிவித்திருந்தார்.

உலகின் மனித உரிமை மற்றும் பெண் உரிமைக்காக நாம் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கனடா உறுதியாக உள்ளதுஎன்றும் அவர் குறிப்பிட்டார். 

சோல் நகரில் இருந்த கொரிய விமானசேவை விமானம் ஒன்றின் மூலம் கடந்த சனிக்கிழமை பியர்சன் விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். 

விமானம் புறப்படும் முன், “நான் செய்து காட்டினேன்என்று குறிப்பிட்டு டுவிட்டரின் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். தனது குடும்பம் தன்னை கொலை செய்யப்போவதாக அல் குனுௗன் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருந்தார். எனது நாட்டில் கற்கவோ, வேலை பார்க்கவோ என்னால் முடியவில்லை.

நான் விரும்பியவாறு கற்கவும் வேலை பார்க்கவும் வேண்டும்என்று குறிப்பிட்டிருந்தார்.

தனது குடும்பத்தினரிடம் உடல் மற்றும் உளரீதியில் துன்புறுத்தலுக்கு முகம்கொடுத்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு பிறிதொரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 

எனினும் இது பற்றி கருத்து வெளியிட மறுத்த, அல் குனுௗன் குடும்பத்தினர் அவரது பாதுகாப்பு பற்றியே கவலைப்படுவதாக தெரிவித்திருந்தனர். 

பெண் உரிமை செயற்பாட்டாளர்களை விடுவிக்கும்படி சவூதிக்கு கனடா அழுத்தம் கொடுத்த நிலையில் ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நீடித்து வருகிறது. இதனால் சவூதிக்கான கனடா தூதுவரை வெளியேற்றிய சவூதி நிர்வாகம், அந்த நாட்டுடனான புதிய வர்த்தகங்களையும் முடக்கி இருந்தது.  




   


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top