றோகித போகொல்லாகம மற்றும் அவரது மகனுடன்
சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் பேச்சு நடத்தியமை குறித்தும்
அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து
புறப்பட்ட ஜெட் விமானம் குறித்தும்
விசாரணை நடத்துமாறு கோரிக்கை


திருகோணமலை - சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரியுள்ளன.

சீனா, சிங்கப்பூர், ஹொங்கொங் நாடுகளைச் சேர்ந்த ஐந்து முதலீட்டாளர்கள் கடந்த 3ஆம் திகதி தனி ஜெட் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

இவர்கள், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் றோகித போகொல்லாகமவின் உதவியுடன், கட்டுநாயக்கவில் இருந்து தாம் வந்த விமானத்திலேயே சீனக்குடா விமானப்படைத் தளத்தில் சென்று தரையிறங்கினர்.

கிழக்கு மாகாண ஆளுனராக இருந்த றோகித போகொல்லாகம உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தி விட்டு நேற்று முன்தினம் சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்தே, சிங்கப்பூருக்கு அந்த ஜெட் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

அங்கீகரிக்கப்படாத விமான நிலையத்தில் இருந்து,  சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் குடிவரவுச் சட்டங்களை மீறி, குறித்த விமானம் புறப்பட்டுச் செல்வதற்கு யார் அனுமதி அளித்தது என்றும், கிழக்கின் முன்னாள் ஆளுனருடன் இந்த முதலீட்டாளர்கள் நடத்திய பேச்சுக்கள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

றோகித போகொல்லாகம மற்றும் அவரது மகனுடன் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் பேச்சு நடத்தியமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள சிவில் சமூக செயற்பட்டாளர்கள், உரிய அனுமதியின்றி ஜெட் விமானம் சீனக்குடாவில் இருந்து புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் தரையிறங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சே அனுமதி அளித்திருந்தது. எனினும், சிவில் விமானப் போக்குவரத்து துறையின் அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை இதுகுறித்து விசாரணைகளை நடத்தும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top