பெற்றோலிய கூட்டுத்தாபன சம்பவம்;

பொதுஜன முன்னணி மாநகர உறுப்பினர்
 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்


தெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியைச் சேர்ந்த கொழும்பு மாநகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (06) இரவு, வெல்லம்பிட்டிய, சேதவத்தையிலுள்ள அவரது வீட்டில் வைத்து, கொழும்பு குற்ற பிரிவினரால் (CCD) அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் (07) சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில், கடந்த வருடம் xக்டோபர் 28 ஆம் திகதி அப்போதிருந்த பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கடமை நிமித்தமாக தெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்திற்குள் சென்றதை அடுத்து அமைதியற்ற நிலையை தோற்றுவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இச்சந்தர்ப்பத்தில் அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் 34 வயதான பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர், அமைச்சரின் மெய்காப்பாளரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியானதோடு, மேலும் இருவர் காயமடைந்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற அதே தினத்தில் (28) அமைச்சரின் மெய்ப் பாதுகாப்பாளர் கைது செய்யப்பட்டதோடு, தற்போது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு, எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதிவரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அமைச்சரை கைதுசெய்யுமாறு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அதற்கு அடுத்த தினம் (29) கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, ரூபா 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top