சீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற
 விமானத்தினால் சர்ச்சை


இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றி வந்த தனியார் ஜெட் விமானம்  ஒன்று, திருகோணமலை, சீனக்குடா விமானத் தளத்தில் இருந்து, அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா , சிங்கப்பூர் ,ஹொங்கொங் நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சிலர், தனி விமானம் ஒன்றில், கடந்த 03 ஆம் திகதி, இலங்கைக்கு வந்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்த விமானம், பின்னர் பாதுகாப்பு அமைச்சின்  அனுமதியுடன் திருகோணமலை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.

திருகோணமலையில் முதலீடுகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னர், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் குழு நேற்று சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூருக்குப் பயணமான முதல் விமானம் இதுவாகும்.

அதேவேளை, அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படாத  விமான நிலையம் ஒன்றில் இருந்து, இந்த விமானம் புறப்பட்டுச் சென்றமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டம் ஆகியவற்றின்படி, வெளிநாட்டு விமானம், அனுமதி பெறாத விமான நிலையம் ஒன்றிலிருந்து, நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்ல முடியாது.


அதேவேளை, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக, கப்பல்களுக்கு வழங்கப்படும் அனுமதியைப் பயன்படுத்தியே இந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top