336 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!
வெளிநாட்டவர் இருவர் கைது

நாடு முழுவதும் விநியோகிக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 336 கோடி ரூபாய் பெறுமதியான 278 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக கல்கிஸ்ஸை பகுதியில் வீடொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்து 9 கிலோ ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது போதைப்பொருள் விநியோக மத்திய நிலையமாக செயற்பட்டு வந்த தெஹிவளை கெளடான பார அத்திட்டிய பகுதியிலுள்ள சொகுசு வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டது.

அங்கிருந்தும் பங்களாதேஷ் பிரஜையொருவரை கைதுசெய்த பொலிஸார் இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் தொகையான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 7.5 கோடி பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 23ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் கடந்த 2013 ஆகஸ்ட் 31ம் திகதி ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவு மற்றும் பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 261 கிலோ நிறையுடைய ஹெரோயின் தொகையே, இலங்கையில் மீட்கப்பட்ட அதிகூடிய தொகை கொண்ட போதைப்பொருளாக காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீட்கப்பட்ட 278 கிலோ நிறையுடைய 336 கோடி ரூபா பெறுமதிவாய்ந்த தொகையே இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட அதிகூடிய தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு வாரங்களுக்கு முன்னர் பங்களாதேஷ் பெண்மணி ஒருவர் 32 கிலோ ஹெரோயினுடன் இதே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top