புதிய அமைச்சரவை நியமனம்
பொலிஸ்துறை, ஊடகத்துறையை
வசப்படுத்த மைத்திரி முயற்சி
ஐதேக கடும் எதிர்ப்பு



சட்டம் ஒழுங்கு அமைச்சையும், ஊடகத்துறை அமைச்சையும், ஐதேகவுக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதால், புதிய அமைச்சரவை நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டு இரண்டு நாட்களாகியும், புதிய அமைச்சரவை இன்னமும் நியமிக்கப்படவில்லை.

புதிய அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக, ஜனாதிபதி முட்டுக்கட்டை போடுவதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களத்தை,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஒக்டோபர் மாதம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்திருந்தார்.

இந்த நிலையில் ஐதேக அரசாங்கத்திடம் சட்டம் ஒழுங்கு அமைச்சை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி விடாப்பிடியாக உள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டுக்கு ஐதேக எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களம் மீண்டும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஐதேக, அந்த அமைச்சுப் பதவி தமது கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது,

அதுபோன்றே, ஊடகத்துறை அமைச்சும் தனது வசமே இருக்க வேண்டும் என்றும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சை விட்டுக் கொடுத்தாலும் கூட, இரண்டு அரச ஊடக நிறுவனங்கள் தனது நேரடி கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இதற்கும் ஐதேக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அனைத்து ஊடக நிறுவனங்களும் ஊடகத்துறை அமைச்சின் கீழேயே இருக்க வேண்டும் என்றும், அந்த அமைச்சு ஐதேகவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் ஐதேக தெரிவித்துள்ளது, இதனால் புதிய அமைச்சரவை நியமனத்தில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளன.             



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top