பள்ளிவாசல்களில் மக்களை கொன்ற
பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்
நீங்களும் உச்சரிக்க வேண்டாம்
- நியூசிலாந்து பிரதமர்
   
பள்ளிவாசல்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, கொலையாளிகள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50பேர் பலியாகினர். இந்த தாக்குதலையடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ஜெசிந்தா தலைமையில் சிறப்பு பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்திலேயே, அரபு மொழியில் வணக்கம் கூறிவிட்டு ஜெசிந்தா பேச தொடங்கினார்.
இதில் அவர் பேசியதாவது:

பயங்கரவாத நடவடிக்கையால் பல உயிர்களை பலி வாங்கி உள்ளான். அதனால் அவனது பெயரை கேட்கக்கூட விரும்பவில்லை. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எம்பிக்கள் பணியாற்றுவார்கள். சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்.


அவன் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி. ஒருபோதும் அவனது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். நீங்களும் அவனது பெயரை உச்சரிப்பதை விடுத்து, அவனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசுங்கள் என அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 


முன்னதாக நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில், நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top