சம்பிக்க ரணவக்க, வஜித அபேவர்த்தன
ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான
நிதி ஒதுக்கீடுகள் தோல்வி


அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, வஜித அபேவர்த்தன ஆகியோரின்  கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நேற்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.

சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும், வஜித அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்துறை , உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத் நிதி ஒதுக்கீடுகள் குறித்த  குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த விவாதத்தின் முடிவில், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த ரஞ்சித் சொய்சா கோரினார்.  இதையடுத்து சபாநாயகர் கரு ஜெயசூரிய மாலை 7.30 மணியளவில் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வஜித அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்துறை , உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களுக்கான வரவுசெலவுத் நிதி ஒதுக்கீடுகள் 15 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆதரவாக, 23 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதேவேளை, சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் 14 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாவும், செல்வம் அடைக்கலநாதனும் மாத்திரம் வாக்கெடுப்பின் போது சபையில் இருந்தனர்.  அவர்கள் இருவரும் அரச தரப்புடன் இணைந்து நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top