குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு
புத்தளத்து மக்கள் கொழும்பில் பேரணி:
ஜானாதிபதி, பிரதமர் ஆகியோர்களிடம்
 மகஜரும் கையளிப்பு

புத்தளம் அறுவாக்காட்டில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மக்கள் இன்று 19  ஆம் திகதி) காலி முகத்திடலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை புத்தளத்திலிருந்து 25 பஸ்களிலும் வேறு பல வாகனங்களிலும் கொழும்பு வந்த இவர்கள், காலி முகத்திடலுக்கு முன்னாள் இவ்வாறு ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

புத்தளம் அறுவாக்காட்டில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் எதிர்ப்பு நடவடிக்கைகளுள் ஓர் அங்கமாக இன்று 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு காலிமுகத் திடலில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. க்ளீன் புத்தளம் அமைப்பும், சிவில் அமைப்புக்களும் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

சிங்கள தமிழ், முஸ்லிம்கள் என்ற இன பேதமின்றியும், கட்சி வேறுபாடுகளின்றியும் மத குருமார்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

புத்தளம் குப்பைக்கு எதிரான சுலோக அட்டைகளையும், பதாதைகளையும்  தாங்கியிருந்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு காலி முகத்திடலில்  ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தம் வரை கோசமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு இருந்ததுடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளுடன் தயாராகவும் இருந்தனர். காலை 9மணிக்கு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 04மணித்தியாலமாக நீடித்தது.

பின்னர்,  மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய 07பேர் கொண்ட குழு ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று மேலதிக செயலாளர் சமந்தி கருணாதாசவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். புத்தளத்தின் நிலமை தொடர்பில்  அவர்கள் அங்கு விளக்கியதுடன் இந்த திட்டத்தை ஜனாதிபதி நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினர் .ஜெ.எம். பாயிஸ் கூறியதாவது.

நாங்கள் வழங்கிய மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றுக்கு நேரம் ஒதுக்கி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சர்வமத குருமார்,  செயற்பாட்டாளர் இப்லால் மரைக்கார், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முக்கியஸ்தர் மெளலவி மிப்லால், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், நஸ்லியா காதர்  உட்பட கிளீன் புத்தளம் அமைப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

பின்னர், ஜனாதிபதி செயலகத்திலிருந்து பேரணியாக அலரி மாளிக்கைக்கு இவர்கள் நடந்து சென்றனர். குப்பைக்கு எதிரான சமூக செயற்பாட்டாளர்கள் அலரி மாளிகையில் பிரதமரின் உதவிச் செயலாளர் குசாரி, திட்டப்பணிப்பாளர் வன்னி நாயக்க ஆகியோருடன் சுமார் 1மணித்தியாலயம் வரையில் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமைகளை எடுத்துக்கூறி மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இம்மக்களின் பிரச்சினையைக் கேட்டறிந்த பிரதமரின் உயர் அதிகாரிகள் இது தொடர்பில்  இன்றே அறிக்கை ஒன்றை தயாரித்து மகஜரையும் இணைத்து பிரதமரின் செயலாளரிடம் பூர்வாங்க அறிக்கை ஒன்றை கையளிப்பதாகவும், பிரதமர், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன்  புத்தளம் சமூகச் செயற்பாட்டாளர்களை சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தனர். இந்த சந்திப்பு மிகவும் சாதகமாக அமைந்திருந்ததாக சந்திப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top