`துப்பாக்கிச்சூடு சம்பவம், நியூஸிலாந்தின்
உண்மையான முகம் அல்ல;
இதுதான் உண்மையான முகம்!'-
முஸ்லிம்களிடம் கண்ணீர்விட்ட நியூஸிலாந்து பிரதமர்

ஜெசிண்டா ஆர்டெர்ன், கடந்த இரண்டு மூன்று நாள்களாக இணையத்தில் அதிகம் புகழப்படும் பெண் ஆளுமை. நியூஸிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் துவண்டுபோன மக்களைத் தேற்றும் சக மனுஷி.

மார்ச் 15 நண்பகலில், நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் வலதுசாரி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 50 பேர் மரணித்தனர். நியூஸிலாந்தில் வசிக்கும் இஸ்லாமிய சமூகம்மீது ஒரு கும்பல் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் இதுவாகும், அந்நாட்டு ஊடகங்கள். நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நியூஸிலாந்து  பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் மிகவும் பொறுமையாகக் கையாண்டார்.

ஆவேசப்பட்டு வார்த்தைகளையோ, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் போன்ற வீர வசனங்களையோ அவர் பேசவேயில்லை. மாறாக, முதல் வேலையாக நியூஸிலாந்தில் துப்பாக்கி பயன்பாட்டில் கட்டுப்பாட்டுச் சட்டங்களை விரைவாகச் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதிகொடுத்தார்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களையும், இறந்தவர்களின் குடும்பத்தையும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பள்ளிவாசலுக்கு வெளியே, மெல்லிய கறுப்புத் துணியைத் தலையில் முக்காடிட்டு வந்த ஜெசிண்டா, மக்களுடன் நின்று உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன.

``துப்பாக்கிச்சூடு சம்பவம், நியூஸிலாந்தின் உண்மையான முகம் அல்ல. இப்போது, இங்கு ஒன்றுதிரண்ட உங்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறோமே... இதுதான் நியூஸிலாந்தின் உண்மையான முகம். இதுபோன்று இனி நடக்காது’’ என்று முஸ்லிம் மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

குடும்ப உறுப்பினர்களை இழந்து கதறி அழுத பெண்களைக் கட்டித்தழுவி கண்ணீர்விட்டார். அவரின் கண்ணீர், பாதிக்கப்பட்ட மக்கள்மீது அவர் கொண்ட உண்மையான அக்கறையைப் பிரதிபலித்தது.  `எந்த ஒரு பிரதமரும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை கட்டித்தழுவி அழமாட்டார்’ என்று இணையவாசிகள் நெகிழ்ந்துவருகின்றனர். குறிப்பாக, முஸ்லிம் மக்கள் ஜெசிண்டாவை பாராட்டிவருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில், ``இந்த மண்ணில் 160 மொழிகள், 200-க்கும் மேற்பட்ட இன மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில், நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகத்துடன் நாம் உடன் நிற்கவேண்டிய நேரமிது.

இந்தக் கேவலமான காரியத்தைச் செய்தவர்களின் சித்தாந்தத்தை வண்மையாகக் கண்டிக்கிறேன். இப்படிச் செய்பவர்களுக்கு இங்கு இடம் கிடையாது. அவர்களின் பெயரைக்கூட இங்கு நான் சொல்ல விரும்பவில்லை. அதை நாம் உச்சரிக்கக்கூட அவர்களுக்கு தகுதி இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் அனைத்தையும் அரசு செலவிலேயே செய்துமுடித்தார். அவர்களுக்கு நிதியுதவியும் வழங்க ஏற்பாடுசெய்துள்ளார்.

உலகத் தலைவர்களாகத் திகழும் 21 பெண்களில் ஒருவரான ஜெசிண்டா, ஒருமுறை ஐ.நா சபைக்கு தன்னுடைய 3 மாத கைக்குழந்தையை அழைத்துவந்ததன்மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

``ஐ.நா கூட்டமும் முக்கியம், என் குழந்தையையும் வேறு ஒருவரிடம் விட்டுவிட்டு வர மனதில்லை’’ என்று விளக்கம் கொடுத்தார்.  ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில், கைக்குழந்தையுடன் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல் பிரதமர் ஜெசிண்டா. விவேகம், இறக்கம், உறுதி என உலக மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் ஜெசிண்டா!
  




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top