கல்முனை தொகுதி வாக்குகளுக்காக
சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படுவதை
ஹரீஸ் தடுக்கின்றார்
விஜித ஹேரத் எம்.பி தெரிவிப்பு



சாய்ந்தமருதுக்கு தனியான பிதேசசபை உருவாக்கப்படுவதை இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தடுக்கின்றார். கல்முனை தொகுதி வாக்குகளுக்காக சாய்ந்தமருது பிரதேச சபை தடுக்கப்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சாய்ந்தமருது பிரதேசபை உருவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமை ச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே விஜித ஹேரத் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

எனினும், இதுவிடயத்தில் எல்லை நிர்ணயப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பதிலளித்தார்.

விஜித ஹேரத் எம்பி உரையாற்றுகையில் மேலு தெரிவித்ததாவது,
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையொன்றை உருவாக்கித் தருமாறு அங்குள்ள முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இதனை வழங்க முடியும் என்றே மாறி மாறி அதிகாரத்துக்கு வந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்கள் கூறுகின்றனர். கடந்த தேர்தல் காலத்தில் இந்த விடயம் அதிகமாகப் பேசப்பட்டது. தேர்தல் பிரசாரங்களுக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அப்போதைய அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் சாய்தமருது பிரதேச சபை அமைத்துத் தரப்படும் எனப் பகிரங்கமாக அந்த மக்களுக்கு உறுதியளித்திருந்தனர்.

அது மாத்திரமன்றி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்திலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஏகமனதான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இவற்றுக்கும் அப்பால் அமைச்சரவையில் யோசனையொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்த யோசனை அங்கீகரிக்கப்பட்டதுடன், ஓரிரு வாரங்களில் புதிய சபை உருவாக்கப்படும் என அப்போதைய அமைச்சர் பைசர் முஸ்தபா சபையில் கூறியிருந்தார். அவர் கூறி ஒருவருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் அவர் தற்பொழுது அமைச்சுப் பதவியிலும் இல்லை.

எனவே இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது. சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்குவதில் எந்தவித எல்லைப்பிரச்சினையும்  நிர்வாகப் பிரச்சினையும் இல்லை. பிரதேச செயலாளர்கள் கூட அதற்குத் தடையை ஏற்படுத்தவுமில்லை, மாவட்ட செயலாளர் அனுமதி வழங்கியுமுள்ளார்.

இவ்வாறான நிலையில் நீங்களே (இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்ப் பார்த்து) இதற்குத் தடையாக இருக்கின்றீர்கள். உங்களை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அமைச்சரும் இதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றார் எனக் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்,

அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் அண்மையில் கூட்டமொன்றை நடத்தியிருந்தோம். இதில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். எதிர்காலத்தில் சாய்ந்தமருதில் உள்ள பள்ளித் தலைவர்கள், கல்முனை பள்ளி தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் மருதமுனை பள்ளித் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். 1987 ஆண்டுக்கு முன்னர் இருந்தது போன்று சபைகள் இருக்க வேண்டும் என்றே அவர்கள் கேட்கின்றனர். நான்கு சபைகளையும் ஒன்றாக அமைக்குமாறே அங்குள்ள மக்கள் கேட்கின்றனர் என்றார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top