ஒலுவிலில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தினால்
காணிகளை இழந்தவர்களுக்கு
ஓரிரு வாரங்களிற்குள் நஷ்ட ஈட்டுத் தொகை:
பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்



ஒலுவிலில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சாகல ரத்னாயக்கவை இன்று அவரது அமைச்சில் வைத்து சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் மேலும் கூறுகையில்,

அமைச்சர் சாகல ரத்னாயக்க, துறைமுக அதிகாரசபையின் தலைவர் காவன் ரத்நாயக்க, முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவ விதாரன உள்ளிட்டோர் உடனான விசேட கலந்துரையாடலின் பின்பு குறித்த ஒலுவில் கரையோரத்தினால் பாதிக்கப்பட்ட இனங்காணப்பட்டவர்களில் முதற்கட்டமாக 29 நபர்களுக்கே நஷ்ட ஈட்டுத் தொகை எதிர்வரும் ஓரிரு வாரங்களிற்குள் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் துறைமுகத்தினுள் உள்ள தடைப்பட்ட மண்னை அகற்றி மீனவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டு விசேடமான நிதி ஒதுக்கீட்டின் கீழ் சகல விதமான நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு உரியவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையும் வழங்கப்படும்.

கடலரிப்பு மூலமாக ஏற்படும் பாதிப்புக்களுக்கான நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

24,000இற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள். நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, மருதமுனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, பொத்துவில் போன்ற பிரதேச மீனவ குடும்பங்களின் நலன் கருதி மீனவர்களுக்கான மீன்பிடி தொழிலை செய்யக்கூடிய வழிவகைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

அமைச்சர் சாகலவுடனான பேச்சுவார்த்தையின் பின்பே துரிதமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களுடைய பிரச்சினைகள், கடலரிப்பினால் காணிகளை இழந்தோர்களுக்கான நிரந்தர தீர்வு கிட்டியுள்ளது என பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top