குடிபோதையில் காரை செலுத்திய நபரால் 3 பேர் பலி
பேர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி







கல்கிஸ்ஸையில்,  கார் ஒன்று மூன்று வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (09) நள்ளிரவு 12 .10 மணியளவில், கொழும்பு - காலி வீதியில் கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்கு அருகிலும், இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகிலும், இருவேறு விபத்துகளில் 8 பேர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில், மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.

விபத்தை மேற்கொண்ட சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மொஹம்மட் முர்சித் எனும் பேருவளையைச் சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு காரை செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி திசை நோக்கி பயணித்த குறித்த கார், இரத்மலானையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில், எதிர்த் திசையில் வந்த கார் ஒன்றுடனும், மேலும் இரு மோட்டார் சைக்கிள்களுடனும் மோதியுள்ளது.

குறித்த காரில் பிராயாணம் செய்தவா்கள் தனது குடும்பத்துடன் அகலவத்தை சென்று தெஹிவளையில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் எதிர்த்திசையில் வந்த காரின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் வந்த நபர் ஆகியோர் மரணமடைந்துள்ளனர். மேலும் இருவர் மற்றும் மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த நபர், விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி ஆகிய மூவர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை குறித்த விபத்து இடம்பெறுவதற்கு முன்னர், கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து விபத்தை ஏற்படுத்திய குறித்த கார், பாதையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் இருவர் மீது மோதியுள்ளது. இதன்போது பாதசாரிகளின் ஒருவர் மரணமடைந்துள்ளதோடு, மற்றையவர் காயமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர்கள் 18, 21, 54 ஆகிய வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மரணமடைந்தோர் விபரம்:
1. மொஹம்மட் பௌஸ் மொஹம்மட் றிஸ்வான் (54), பஞ்சாலோக்க வீதி, தெஹிவளை
2. சப்ராஸ் காதர் (21), பரகும்பா வீதி, மெதிமால, தெஹிவளை
3. தில்ஷான் குமார (18), புத்தளம் வீதி, பண்டுலுகம, அநுராதபுரம்

சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top