நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம்
ஜனாதிபதிக்கு இல்லை
- உயர்நீதிமன்றத்தில் இன்று வாதம்



நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை கோரிக்கைக்கு அமைய அல்லது நான்கரை ஆண்டுகளில் பின்னர், நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்த போதிலும் இந்த இரண்டு முறைகளை தவிர அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி . கனக ஈஸ்வரன் இன்று உயர் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நடந்து வரும் வழக்கு விசாரணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வாதங்களை முன்வைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் வாதங்களை முன்வைத்த அவர்,

ஜனாதிபதிக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு அமைய அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க செயற்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுப்படியற்றது என அறிவிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, பிரதம நீதியரசர் தலைமையில் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா அமர்வின் தலைவர், நீதியரசர்கள் புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட, மர்து பெர்னாண்டோ ஆகியோர் அமர்வில் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட 13 தரப்பினர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

வழக்கு விசாரணைகள் இன்றும், நாளை, நாளை மறுதினமும் நடைபெறவுள்ளதுடன் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top