அரைகுறை வேலைகளுடன் அப்படியே விடப்பட்டிருக்கும்
சாய்ந்தமருது (G.M.M.S) குறுக்கு வீதியின் அவல நிலை

சாய்ந்தமருது (G.M.M.S) அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள குறுக்கு வீதியை கொங்கிறீட் வீதியாக செப்பனிடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியான முறையில் செய்யப்படாமல் அரைகுறை வேலைகளுடன் அப்படியே விடப்பட்டிருப்பது குறித்து இவ்வீதியில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வீதி சரியாகத் திட்டமிட்டு செப்பனிடப்படவில்லை. வீதியில் நிறையும் நீர் வடிந்தோட சரியான வழியில்லாமல் அப்படியே வீதியில் தேங்கி நிற்கின்றது. இவ்வீதியைச் செப்பனிடுவதற்கு நியமிக்கப்பட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சரியாக வேலைத் திட்டத்தைக் கண்காணிக்கவில்லை என்பதுதான் இவ்வீதியின் இந்த நிலைக்கு காரணமா? என மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
வீதியை செப்பனிடுபவர்களால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் பிரதான கதவுக்கு முன்னாள் பள்ளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் நிறைந்துள்ள நீரை எந்தப் பக்கமும் ஓடமுடியாமல் செய்திருக்கிறார்கள்.
இந்த பள்ளத்திலுள்ள நீரில் மாணவர்கள் விளையாடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த நீரில் டெங்கு நுளம்பு,மற்றும் கிருமிகள் உருவாகி  மாணவர்களுக்கும் இந்த இடத்தை சுற்றியுள்ள அயலவர்களுக்கும் நோய பரவக் கூடிய அபாய நிலையும் காணப்படுகின்றது.
இது விடயத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர், இப்பிரதேசத்திற்கான மாநகர சபை உறுப்பினர், சுகாதார சேவை உத்தியோகத்தர் ஆகியோர் உடன் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வீதியிலுள்ள மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top