மட்டக்களப்புபொத்துவில் ரயில் பாதை
விஸ்த்தரிக்கும் திட்டம்
கைவிடப்பட்ட நிலையில் இருப்பது ஏன்?
தமிழ் மொழி பேசும் மக்கள் கேள்வி



மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேசங்களின் ரயில் பாதை விஸ்த்தரிக்கும் திட்டத்தை புத்துயிர் அளித்து  நடைமுறைப் படுத்துவதற்கு கிழக்கு     மாகாணத்திலுள்ள அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் தீவிரம் காட்டி இதுவரையும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் மொழி பேசும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் யாழ்தேவி புகையிரதம் யாழ்ப்பாணத்திற்கான சேவைகளை மீண்டும் ஆரம்பித்து  வட பகுதி மக்கள் ரயில் மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது வட பகுதி மக்களுக்கு ஒரு சந்தோசமான போக்குவரத்து சேவையாகும். இது போன்று கிழக்கு மாகாணத்தில் வாழும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பல வழிகளிலும் நன்மை பெறக்கூடிய இத்திட்டம் அரசாங்கத்தினால்  இதுவரை கவனத்தில் எடுக்கப்படாமல் இருப்பது ஏன்? எனவும் மக்கள் வினவுகின்றனர்.

மட்டக்களப்பு  வரையிலுள்ள ரயில் பாதையானது பொத்துவில் வரை விஸ்த்தரிக்கப்படல் வேண்டும். கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கரையோர மக்கள் பல வழிகளிலும் நன்மையடைய வேண்டும்  இதற்கு மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் சேவைக்குரிய பாதை உருவாக்கப்படல் வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் கடந்த 1992 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில்  முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் மர்ஹும் .ஆர். மன்சூர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் அனுமதிக்கு இணங்க ஈரான் நாட்டிற்குச் சென்று மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை அமைக்கும் விடயமாக உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னாள் அமைச்சர் மன்சூர் அன்று மேற்கொண்டிருந்தார்.
 இப் பேச்சுவார்த்தையின் பயனாக 1993 ஆம் ஆண்டு ஈரான் நாட்டு அரசாங்கத்தின் பொறியியல் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று மட்டக்களப்பு கல்முனை பிரதேசங்களுக்கு வருகை தந்து மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்த்தரிப்பு செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

 இதன் பின்னர் இதற்குத் தேவையான திட்ட வரைவுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். ரயில் பாதை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் ஆட்சி மாற்றங்கள்  காரணமாக இத்திட்டம் அப்படியே கைவிடப்பட்ட நிலையில் இதுவரையும் இருந்து கொண்டிருக்கிறது.

 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை 27 வருடங்கள் கடந்துவிட்டன. மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான தூரம் சுமார் 100 கிலோ மீற்றர்களாகும்.முன்னாள் அமைச்சர் மன்சூருக்குப் பிறகு அரசியல் அதிகாரத்திற்கு இப்பிரதேசத்தில் வந்தவர்கள்  இந்த ரயில் பாதை விஸ்த்தரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமது அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தியிருந்தால் ஒரு வருடத்திற்கு 5 கிலோ மீற்றர்கள் என்ற நிலையில் இந்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் இன்று பொத்துவில் அக்கரைப்பற்று கல்முனை களுவாஞ்சிக்குடி பிரதேச மக்கள் தமது உற்பத்திப் பொருட்களை வேறு இடங்களுக்கு இலகுவாக கொண்டு செல்ல முடிந்திருப்பதுடன் குறைந்த செலவில் பிரயாணங்களையும் செய்துகொண்டிருப்பார்கள்.

இந்த ரயில் பாதை விஸ்த்தரிப்பு விடயமாக முன்னாள் அமைச்சர் .ஆர். மன்சூர் கடந்த மஹிந்த ஆட்சியில் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் இக்கடிதத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து தங்களது கோரிக்கையின் பிரகாரம் இது தொடர்பில்  புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரினால் கவனம் செலுத்தப்படும் என பதில் வந்ததாகவும் பின்னார் பொது முகாமையாளரோடு தொடர்பு கொண்டபோது இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாகவும் தெரியவருகின்றது.

இப்பிரதசங்களில் அபிவிருத்தி வேலைகள் நடத்தப்படுகின்றன என ஒரு சில அரசியல்வாதிகளால் மக்களுக்கு பூச்சாண்டி காட்டப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் சாரதிகளும் நாங்களே நடத்துநர்களும் நாங்களே என்றும் தம்பட்டம் அடிக்கப்பட்டன. ஆனால்,உருப்படியான வேலைத்திட்டங்கள் எதுவும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசங்களில் இடம்பெறுவதாக இல்லை என மக்கள் கவலை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
  மட்டக்களப்பு- பொத்துவில் ரயில் பாதைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்வரும் காரணங்கள் இப் பிரதேச மக்களுக்குச் சாதகமாக உள்ளன

   ** ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  உலக நாடுகளுடன் குறிப்பாக முஸ்லிம் நாடுகளுடனும் வைத்திருக்கும் நல்லுறவு.

   ** மட்டக்களப்பு- பொத்துவில் ரயில் பாதையை செயல்படுத்துவதற்கு ஈரான் நாட்டு அரசாங்கத்தினால் 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.                                                    

  **  கிழக்கு மாகாணம் இன்று கல்வி, வியாபாரம், மற்றும் சுற்றுலாத்துறை போன்றவற்றில் முன்னேற்றம் கண்டிருப்பதுடன் இந்த முன்னேற்றத்தில் புகையிரத சேவை அவசியமானதாக உள்ளது.

  ** இப்பிரதேசத்தில் தென் கிழக்குப் பல்கலைக் கழகம்,ஒலுவில் துறைமுகம், அறுகம்பை உல்லை, பாசிக்குடா என்பன போன்ற சுற்றுலா  பயணிகளின் இடங்கள் அமைந்துள்ளமையும் அதிக எண்ணிக்கையான வெளிநட்டு உல்லாசப் பயணிகள் இப்பிரதேசங்களுக்கு உல்லாசத்திற்காக வருகை தருவதும்

  **    இம்மாகாணத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்ததினால் கரையோரப் பிரதேசம் அழிந்து அப்பிரதேசத்தில் வாழ்ந்த குடியிருப்புக்கள் கடற்கரையிலிருந்து 65 மீற்றருக்கு அப்பால் தவிர்க்கப்பட்டிருப்பது. இது கடற்கரையோரமாகவும் சில பிரதேசங்களில் ரயில் பாதை அமைப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது

   **  சுனாமிக்குப் பின்னர் பொத்துவில், களியோடை, கல்லாறு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நவீன பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளமை

        கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய இந்த ரயில் பாதைத் திட்டத்தை ஆர் பிரேமதாச அரசு முன்னெடுக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசும் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்ஸவும் முன்னெடுக்கவில்லை. தற்போதய நல்லாட்சி  அரசு தென் பிரதேசத்திலிருந்து வடக்குக்கு ரயில் பாதையைக் கொண்டு செல்வது போன்று மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை அமைக்கும் வேலைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பிரதேச மூவின மக்களினதும் அவாவாக இருந்து கொண்டிருக்கிறது.
அரசாங்கம் சமர்ப்பித்திருந்த வரவு செலவுத்திட்டங்கள் எதிலும் நிதி ஒதுக்கப்பட்டு அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போதய நல்லாட்சி மலர கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக கல்முனைப் பிரதேச மக்கள் அளித்த ஒத்துழைப்பை ஆட்சியாளர்கள் இலகுவில் மறந்துவிட முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்முனை கடற்கரை மைதானத்தில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து தனது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற சனத்திரளை பார்க்கவில்லை எனத் தெரிவித்த்துடன் அவர் சென்ற இடமெல்லாம் இம்மக்கள் கூட்டத்தை சிலாகித்துப் பேசியும் உள்ளார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பை மேற்கொள்ளப் போவதாகவும் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்ட்த்தில் ஒதுக்குவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குறுதி எந்த வரவு செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கப்பட்டு  நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்கூட இந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்படவில்லை.

இது போன்று கல்முனை சந்தாங்கேணி மைதாணத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட அங்கு கூடியிருந்த பெரும் திரளான மக்கள் மத்தியில் அப்பிரதேச மக்களுக்காக சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் 2020 ஆம் ஆண்டை இலக்காக வைத்து பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டக்களப்பு, அம்பாறை பிரதேச மக்களின் போக்குவரத்து கஸ்டம் மற்றும் பொருளாதாரப் பின்னடைவுகளை ஆட்சியாளர்கள் கணக்கில் எடுக்கவில்லை என்பதைக் காட்டுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.       

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசவினால் கல்முனையில் (அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை வளவில்) நடைபெற்ற ஜனாதிபதி பிரச்சாரக் கூட்டமொன்றில் தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை ரயில் பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த ரயில் பாதைத் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது காலத்திற்கு காலம் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் இப்பிரதேச மக்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. இதுகுறித்து இப்பிரதேச புத்தி ஜீவிகள் நலன் விரும்பிகள் கவலை கொண்டவர்களாகக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி குவைத் போன்ற முஸ்லிம் நாடுகளின் உதவியைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-.எல்.ஜுனைதீன்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top