பாகிஸ்தான் போரை விரும்பவில்லை
பிரதமர் மோடி தேர்தலுக்காக
 மக்களிடம் வெறுப்பை பரப்புகிறார்
இம்ரான்கான் பேச்சு

  

தனது மண்ணிலோ, உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று இம்ரான்கான் பேசியுள்ளார்.

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள சாச்ரோ நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தனது மண்ணிலோ, அல்லது உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது. தற்போது இருப்பது புதிய பாகிஸ்தான். எங்கள் நாட்டில் முதலீட்டையே நாங்கள் விரும்புகிறோம்.

நமது புதிய பாகிஸ்தான் வளமுடனும், ஸ்திரதன்மையுடனும், அமைதியுடனும் திகழ வேண்டும். சர்வதேச சமூதாயத்தில் ஒரு பொறுப்புள்ள நாடாக திகழ பாகிஸ்தான் விரும்புகிறது. எனவே இங்கு எந்த ஒரு பயங்கரவாத இயக்கத்தையும் அனுமதிக்க மாட்டோம்.



பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமானை திரும்ப அனுப்பி வைத்தோம். ஏனெனில் நாங்கள் போரை விரும்பவில்லை. சமாதானத்தையே விரும்புகிறோம். எனவே மீண்டும் அந்த தகவலை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளோம்.

புல்வாமாவில் நடந்த தாக்குதல் குறித்து நடத்தப்படும் விசாரணைக்கு உதவ நாங்கள் தீர்மானித்து இருக்கிறோம். இது பயத்தால் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிதாக வளர்ந்து வரும் பாகிஸ்தானில் வறுமையை ஒழிக்க வேண்டும். கொள்கைகள் அனைத்தும் நமது மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக எடுக்கப்படுகிறது. தேசிய செயல் திட்டத்தை செயல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன. எனவே ஆயுதம் ஏந்தும் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பாகிஸ்தானில் செயல்பட அனுமதிக்க முடியாது.

நான் பிரதமரானதும் இந்திய பிரதமர் மோடியுடன் பேசினேன். துணை கண்டத்தில் ஏராளமான ஏழை மக்கள் இருக்கிறார்கள். நமது பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வோம். சமாதானம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தி வறுமையை அகற்றுவோம் என்றேன்.

ஆனால் பிரதமர் மோடி தேர்தலுக்காக மக்களிடம் வெறுப்பை பரப்புகிறார். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தானில் மைனாரிட்டியாக வாழும் இந்துக்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top