நியூயோர்க்கில் 24.09. 2014 இல் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 
69வது அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஆற்றிய உரை




தலைவர் அவர்களே,
மதிப்புக்குரியவர்களே,
சீமாட்டிகளே, சீமான்களே,
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69வது அமர்வின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டமைக்காக மேன்மைக்குரிய சாம் குடேசா (Sam Kutesa) அவர்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். வெற்றிபெறுவதற்காக உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, முழுமையான ஒத்துழைப்புக்கு உறுதிவழங்குகிறேன்.
"நிலைமாற்றக்கூடிய 2015இற்குப் பின்னரான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை வழங்குதலும், அமுல்படுத்தலும்," என்ற இந்த அமர்விற்கான கருப்பொருள் காலப்பொருத்தமானது. ஐநா உருவாக்கப்பட்டதிலிருந்து உலகம் ஏராளமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது, அத்தோடு 2000ம் ஆண்டிலிருந்து புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் அதிகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், நடவடிக்கை எடுக்க வேண்டிய பல சவால்கள் இன்னமும் உள்ளன. இந்த நோக்கத்திற்காக நியாயமான உலகையும், நிலைத்திருக்கக்கூடிய கோளையும் உருவாக்குவதற்கான ஒழுக்கநெறி மற்றும் நடைமுறை முக்கியத்துவம் புறக்கணிக்கப்படமுடியாது.
இலங்கை தற்போது தலைமை வகிக்கும் பொதுநலவாய அமைப்பு ஐநா உறுப்புரிமையில் கால்வாசிக்கும் மேற்பட்ட பங்கை வகிக்கிறது. 2015இற்குப் பின்னரான புதிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்தும் நடைமுறைக்குப் பங்களிப்பதற்கு பொதுநலவாய அரச தலைவர்கள் நவம்பர் 2013 இல் கொழும்பில் இணங்கினர். அதியுச்ச வறுமையின் ஒழிப்பு, நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திக்கான மீள உறுதிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மத்திய கவனக்குவியத்தை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
2015இற்குப் பின்னரான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கண்ணோட்டமானது பகிரப்பட்ட விழுமியங்கள், பொதுநலவாயப் பட்டயம் கொண்டிருந்த கொள்கைகள், தனிநபர் அனுபவங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. வரவிருக்கும் அரசாங்கங்களுக்கிடையிலான பேரங்களை நடுநிலையான 2015இற்குப் பின்னரான புதிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை அடையும் ஒருங்கிணைந்த உணர்வுடன் எதிர்கொள்ளுமாறு பொதுநலவாயத் தலைவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.
நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளுக்கான திட்டக்குழு முன்வைத்துள்ள நிலைமாற்றக்கூடிய இலக்குகளில் நாடுகளுக்கு நடுவிலும், இடையேயுமுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் என்பது ஒன்றாகும். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் குரலையும், பிரதிநிதித்துவத்தையும் தீர்மானம் எடுத்தலில் மேம்படுத்துவதற்கு இந்த இலக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்.
2015இற்குப் பின்னரான நிகழ்ச்சி நிரலானது அமுல்படுத்தலில் கவனத்தைச் செலுத்த வேண்டும். அனைத்து நாடுகளினதும் அரசியல் விருப்பு, அர்ப்பணிப்பின்றி நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவது சாத்தியமற்றதாகும். 8வது புத்தாயிரமாம் இலக்கான அபிவிருத்திக்கான பூகோள ஒத்துழைப்பானது அபிவிருத்தியடைந்த நாடுகளால் நிறைவேற்றப்படாமை திரும்ப ஏற்படுடாமலிருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.
இலக்குகளைத் தீர்மானிக்கும்போது தங்களது சொந்த உள்ளூர் முன்னுரிமைகளை நிலைநிறுத்துவதற்கு நாடுகளுக்கு கொள்கை இடைவெளி கிடைக்காமலிருக்கக் கூடாது. நாடுகளை தங்களது உள்ளூர் செலவீடுகளை மீள-முன்னுரிமைப்படுத்துவதற்குக் கேட்பதை விட, அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கிடையே பலப்படுத்தப்பட்ட ஒத்துழைப்புத் தொடர்பான கவனம் காணப்பட வேண்டும். திறன் வளர்ப்பிற்கு அவசிமான நிதி வளங்களையும், தொழிநுட்பத்தையும் அணுகுவதற்கு தெற்கிலுள்ள நாடுகளுக்கு இது அவசியமானதாகும்.
புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளின் அடைவினைத் தடுத்த நியாயமற்ற வர்த்தக மற்றும் முதலீட்டு விதிகள் போன்ற கட்டமைப்புத் தடங்கல்களும், அரசியல் இடையீடுகளும் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியமாகும். ஆதரவுமிக்க சர்வதேச பொதுளாதார சூழலொன்றின் உருவாக்கம், பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகளிருந்து உள்பட்டதான மேம்படுத்தப்பட்ட முதலீட்டுப் பாய்ச்சல்கள், ஒரு திறந்த பல்தரப்பு வணிக அமைப்பு ஆகியன முக்கியமாகும்.
இரண்டு உலகப்போர்களுக்குப் பின்னராக ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்ட வரலாற்றுத் தறுவாயை நாங்கள் அனைவரும் அறிவோம். அது காணப்பட்ட ஏழு தசாப்தங்களில் இன்னொரு பூகோளப் போரிற்குச் செல்வதிலிருந்து உலகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதற்கு, நோய்களை இல்லாதொழிப்பதற்கு, சிறுவர்களுக்குக் கல்வியூட்ட, சமாதானத்தை நிலைநாட்ட ஆகியவற்றில் ஐநா உதவியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்தாபக நோக்கினை மீள உறுதிப்படுத்துவதற்கு உலகச் சமூகம் வருடத்திற்கு வருடம் செப்ரெம்பரில் ஒன்றுசேர்ந்து வருகிறது.
சர்வதேச சமாதானம், பாதுகாப்பு, செழிப்பு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு ஐநா இன் பங்கு இந்த தற்கால உலகிற்கு அத்தியாவசியமானது. எனினும், சர்வதேச சமூகம் முழுவதினதும் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் வெற்றிகொள்ளுவதற்கு தேர்வுகள், பாகுபாடுகள் பற்றிய புலக்காட்சிகள் எவையுமின்றி நியமங்களின் தொடர்ச்சியான தன்மை சபையிடம் காணப்படுதல் என்பது அவசியமான தேவைகளில் ஒன்றாகும். இந்தத் தறுவாயில் தான், தற்போதைய இயங்கும் அமைப்பு அதன் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு புதிய பரீட்சிப்பு அவசியமானது.
சம்பந்தப்பட்ட நாடுகளிலுள்ள பிரச்சினைகளின் சிக்கல்தன்மையைப் பற்றிய புரிதல் அல்லது ஏற்றுக்கொள்ளல் இன்றி, உள்நோக்கங் கொண்ட நிகழ்ச்சி நிரல்களை அமுல்படுத்துவதற்கான கருவியாக மனித உரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் அனைவராலும் மனித உரிமைகள் ஒரு நன்னெறி, நன்னடத்தைக் கோட்பாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டுமே தவிர, அரசியல் கருவியாக அல்ல. நாடுகளின் சமூக, கலாசாரப் பாரம்பரியங்களின் அமைப்புக்களைப் போதியளவில் கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் வெளிப்புறத் தலையீடானது தவிர்க்க முடியாத முடிவாக நிலைகுலைதலிலேயே நிறைவடையும். உலகின் பல்வேறு பகுதிகள் இன்று இதற்கு மிகுந்த ஆதாரமாக உள்ளன.
மீள்புனரமைப்பு, புனர்வாழ்வு, நல்லிணக்கம் ஆகியவற்றில் இலங்கையானது 5 வருடங்கள் என்ற சிறிய காலப்பகுதியில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் தொடர்பாக மிகக்குறைவான கவனத்தைச் செலுத்தும் சிலரால் தவறாகப் புனையப்பட்ட நிகழ்ச்சி நிரல்களினால் துரதிஷ்ரவசமான பாதிப்படைந்ததாக போருக்குப் பின்னைய இலங்கையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாறியுள்ளது. கணிசமான இந்த அடைவுகளைப் புறக்கணித்துக் கொண்டு எனது நாடு இன்று இலக்காகியுள்ளதில் சமநிலையும்விகிதாசாரமும் குன்றிய தன்மை வெளிப்படையானது. மனிதாபிமான அவசரநிலைமை கொண்ட ஆழ்ந்த குழப்பமிகுந்த நிலைமைகள் காணப்படும் ஏனைய பகுதிகளுக்கான அணுகுமுறைக்கு இது முற்றிலும் முரணானதாகும்.
பன்முகச்சார்பியம் தொடர்ந்தும் சம்பந்தப்பட்டதாகவும், செயற்திறனுள்ளதாகவும் காணப்பட, சம்பந்தப்பட்ட நிறுவகங்களின் சீரமைப்பு அத்தியாவசியமானது. வெற்றிகரமாக அமைவதற்கு இந்த நடவடிக்கையானது ஐநா அமைப்புக்கள், பொறிமுறைகளின் அரசியல் நீக்கத்தோடு, வெவ்வேறு வகையான நிதி வழங்கலின் பணையக்கைதியாக இருப்பதை நிறுத்துவதையும் கொண்டிருக்க வேண்டும். கலந்துரையாடல், நிலைமைகளின் சிறப்பான புரிதல், தேசிய நிறுவகங்களைப் பலப்படுத்துவதற்கு உதவுதல் உட்பட ஒத்துழைப்பு மூலமாக அரசாங்கங்களுடன் பணிபுரிவதற்கு ஐநா அமைப்புக்கள் வழிகளைக் கண்டறிய வேண்டும். பலவந்தப்படுத்தும் உத்திகளுக்குப் பதிலாக இந்த அணுகுமுறையானது பூகோள சவால்களுக்கான நிலைத்திருக்கக்கூடிய தீர்வுகளுக்கான தேடலாக, பல்தரப்பு இராஜதந்திரத்தின் பிரதான புள்ளியை உருவாக்க வேண்டும்.
2015ம் ஆண்டில் ஐநா இன் 70வது வருடமானது, பூகோளத் தலைவர்கள் பாதுகாப்புச் சபையின் ஆரம்ப சீர்திருத்தத்திற்கு ஏற்றுக்கொண்ட 2005ம் ஆண்டு உலக உச்சிமாநாட்டின் 10வது வருடப் பூர்த்தியையும் குறிக்கிறது. இதுசம்பந்தமான உறுதியான முடிவுகள் அடுத்த ஆண்டில் அடையப்படல் வேண்டும்.
காலநிலை மாற்றமானது எங்களது காலத்தில் காணப்படும் முக்கியமான சவால்களில் ஒன்றாகும். திடமான பூகோள பதில் நடவடிக்கையானது 2015ம் ஆண்டிற்கு முன்னர் கிடைக்கப்பெற வேண்டுமென்பதோடு, அது நெறிமுறையினதும், பொதுத்தன்மைக் கொள்கையின் அடிப்படையிலும், ஆனால் வெவ்வேறாக்கப்பட்ட பொறுப்புக்களின் அடிப்படையில் காணப்பட வேண்டும்.
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள வன்முறை மிகவும் வேதனை தருகிறது. இறையாண்மை மிக்க, சுதந்திரமான, ஈடேறக்கூடிய, ஒற்றுமையான பலஸ்தீன தேசத்தின் விரைவான சாத்தியப்பட்டிற்கான இலங்கையின் ஆதரவை நான் மீள வலியுறுத்துவதோடு, இது பாதுகாப்பான, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளோடு, இஸ்ரேலோடு அருகில், சமாதானமாக அமைய வேண்டும். ஐநா இல் பலஸ்தீனத்தை முழு உறுப்பினராக விரைவில் வரவேற்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.
ஆசியாவிற்கும், ஆபிரிக்காவிற்குமிடையே கூட்டு ஒருமைப்பாடு தேவைப்படுகிறது என்பதில் இலங்கை உறுதியாக நம்புகிறது. சமூக - பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கான ஆபிரிக்க மக்களின் முயற்சிகளைக் கண்டு மெச்சுகின்ற நிலையில், திறன் வளர்ப்பிலும், முக்கியமான துறைகளில் அறிவு, வல்லமை பரிமாற்றலுக்காகவும் ஆபிரிக்காவிலுள்ள நாடுகளைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஆரம்பித்துள்ளது.
தீவிர கோட்பியல்களிலிருந்து உருவாகி, தேசிய எல்லைப்புறங்கள் வழியே மக்களைப் பாதிக்கும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான பல்தரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது.
பூகோளம் முழுவதிலுமுள்ள தேசங்களின் பாதுகாப்புக்கும், உறுதித்தன்மைக்குமான கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் தொடர்ந்தும் காணப்படுகிறது. பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி துன்புற்ற நிலையில், ஜனநாயகப் பாரம்பரியம், உயர் சிந்தனைகள் வழி உருவாக்கப்பட்ட சமுதாயங்கள், சமூகங்கள், நிறுவகங்கள் ஆகியவற்றில் பயங்கரவாதம் செலுத்தும் சடுதியான பாதிப்புக்களைப் பற்றி இலங்கை நன்றாக அறியும். சர்வதேச பயங்கரவாதம் மீதான ஐநா விரிவான மாநாட்டின் விரைவான இறுதியாக்கம், ஏற்றுக்கொள்ளல் உட்பட பயங்கரவாதம் மீதான பல்தரப்பு நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் பலப்படுத்த வேண்டும். பயங்கரவாத நிதியளிப்பு, கடற்கொள்ளை, ஒழுங்குபடுத்தப்பட்ட சர்வதேச குற்றங்களின் அனைத்து வகைகளையும் எதிர்கொள்வதற்குமான பல்தரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கெதிரான ஒருதலைப்பட்சமான பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை ஆழ்ந்த கரிசனத்தை வெளிப்படுத்துவதோடு, கியூபாவிற்கெதிரான நீதியற்ற பொருளாதார, வர்த்தக, நிதித் தடையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஐநா பொதுச்சபைக்கான கோரிக்கையின் தொடர்ச்சியான ஆதரவாளராக இருந்து வந்துள்ளது. இந்த வகையான ஒருதலைப்பட்சமான தடைகள் நாட்டின் அப்பாவிப் பொதுமக்களைப் பாதிக்கும் என்பதோடு, அவை நெறிமுறையற்றவை.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையானது அநேகமான புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துள்ளது. 2013 மனித அபிவிருத்திச் சுட்டியில் ஏனைய தெற்காசிய நாடுகளை முந்திக்கொண்டு தரவரிசைப்படுத்தப்படுவதில் இலங்கை வெற்றியடைந்துள்ளது.
தேசிய அபிவிருத்தி உபாயமான மஹிந்த சிந்தனை, "எதிர்காலத்திற்கான தூரநோக்கு", பின்பற்றப்படுவதன் மூலமாக இலங்கை அரசாங்கமானது அனைத்தும் உள்ளடங்கிய மற்றும் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பேரியல் பொருளாதார முகாமைத்துவம், விவசாயத்தின் புத்துயிரளிப்பு, வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானநிலையம், வடிகாலமைப்பு மற்றும் நீர் விநியோகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பலமான தொலைத்தொடர்பு வலையமைப்பு, சிறப்பாக விநியோகிக்கப்பட்ட கிராமிய மற்றும் நகரிய அபிவிருத்தி ஆகியன 2013 இல் 7.8% தனிநபர் மொத்த வருமான வளர்ச்சியிலும், தனிநபர் வருமானமாக 3,280 .அமெரிக்க டொலர்கள் ஆகியவற்றை விளைவாகத் தந்துள்ளன. வடக்கில் உட்கட்டமைப்பிலும், வாழ்க்கைத் தொழில்களும் மேற்கொள்ளப்பட்ட பாரிய முதலீட்டால் ஆதரவளிக்கப்பட்ட வடக்கின் பொருளாதார மற்றும் அரசியல் மேம்பாடும் இந்த வளர்ச்சியில் பங்களித்துள்ளது என்பது ஆழ்ந்த திருப்தியைத் தருகிறது.
மே 2009 இல் பயங்கரவாதத்தின் முடிவினைத் தொடர்ந்து, மக்களுக்கான எனது பொறுப்புக்களை நிறைவேற்றும் பொருட்டு, ஒப்பீட்டளவில் குறைவான காலமாக 4 வருடங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய அளவிலான முரண்பாட்டிற்குப் பின்னரான புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட்டன. அதி முக்கியமானதாக, வடக்கில் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீள உருவாக்கப்பட்டுள்ளன. 28 வருடங்களின் பின்னர் வட மாகாணசபைக்கான தேர்தல் செப்ரெம்பர் 2013 இல் நடாத்தப்பட்டது.
இந்தத் தறுவாயில், முரண்பாட்டின் முடிவைத் தொடர்ந்து ஒரு வாரங்களில், புதிய சமாதான யுகமொன்று உதித்திருந்த போது, ஐநா செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தை நினைவூட்டுகிறேன். எனது நாட்டுக்கும், ஐநா இற்குமிடையிலான நெருக்கமான கூட்டுறவினையும், எதிர்காலத்தில் இணைந்து பணிபுரிவதற்கான எங்கள் அர்ப்பணிப்பினையும் வெளிப்படுத்துவதாக இது அமைந்தது.
இலங்கையிலுள்ள அனைத்து மக்களினதும் நன்மைக்கொத்தவாறு ஆழ்ந்த திருப்தி தருகின்றதும், மாற்றம் தரக்கூடியதுமான பயணமொன்றை நாங்கள் தொடர்கிறோம். இதை நிறைவேற்றும் போது, "அனைவரை நோக்கியும் நட்பு, எவரையும் நோக்கிப் பகைமை இல்லை," என்ற எங்களது பாரம்பரிய வெளிநாட்டுக் கொள்கைக்கேற்றவாறு நாங்கள் செயற்படுகிறோம். எங்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, எங்களது உள்ளூர் செயன்முறையான நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றிற்கு சர்வதேச சமூகம் இலங்கைக்கு பரஸ்பர உணர்வையும், ஆதரவையும் வழங்குமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
குழப்பங்களிலிருந்து ஒழுங்கையும், சச்சரவுகளிலிருந்து ஒத்திசைவையும் நிறுவுவதற்கே அனைத்து மனித முயற்சிகளும் காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த கௌதம புத்தரின் வார்த்தைகளிலிருந்து நாங்கள் புத்துணர்ச்சியைப் பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த வார்த்தைகளுக்கமைவாக, தீய எண்ணங்களையுடைய விமர்சனங்களில் பாதிப்படையாதவாறு நல்லிணக்கம், தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதன் நோக்கத்தில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது.
உங்களனைவருக்கும் மும்மணிகளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.
நன்றி.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top