ஜனாதிபதி தீவிர பிரசாரம் செய்தும்

ஊவா மாகாண தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு பின்னடைவு

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

இந்திய ஊடகங்களில் இச்செய்திக்கு முக்கியத்துவம்

ஊவா மாகாண தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீவிர பிரசாரம் மேற்கொண்ட போதிலும், ஜனாதிபதியின் கட்சி குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.
உவா மாகாணத்தில்  உள்ள 34 ஆசனங்களுக்கு தேர்தல் நடந்தது. இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரின் மகனே முதல்மந்திரியாக பதவி வகித்து வந்ததால், இந்த மாகாண தேர்தலில்ஜனாதிபதி  தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார்.
அதன்படி அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதைப்போல எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, முஸ்லிம் அமைச்சர்களின் ஜனநாயக ஐக்கிய முன்னணி என்பன வாக்கு சேகரிப்பில் முனைப்பு காட்டின.
இந்த மாகாண தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் ஜனாதிபதியின் ஆளும் கூட்டணி, மயிரிழையில் வெற்றி பெற்றாலும், மொத்தத்தில் பின்னடைவையே சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் இங்கு 25 இடங்களை பெற்றிருந்த அந்த கூட்டணியால், தற்போது வெறும் 19 இடங்களையே பெற முடிந்தது.
ஆனால் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 13 இடங்களிலும், மக்கள் விடுதலை முன்னணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, ஆளும் கூட்டணியின் வாக்கு சதவீதம் அங்கு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2009–ம் ஆண்டை ஒப்பிடுகையில், ஜனாதிபதியின்  கூட்டணி பரவலாக 22.98 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.
சிங்களர்கள் அதிகமாக வாழும் மொனரகலை மாவட்டத்தில் ஆளும் கூட்டணியின் வாக்கு சதவீதம் 81 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக குறைந்தது. இதைப்போல பல்வேறு இனத்தினர், குறிப்பாக இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் பதுளை மாவட்டத்திலும் வாக்கு சதவீதம் 67–ல் இருந்து 47–ஆக குறைந்துள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஸ 3–வது முறையாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்த தேர்தல் முடிவுகள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
இவ்வாறு இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை பிரசுரித்துள்ளன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top