பொத்தானை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனானை மேற்கு பொத்தானை கிராமத்தில் மீள் குடியேறியுள்ள தமிழ் முஸ்லிம் மக்களுக்கான விஷேட கூட்டமொன்று அண்மையில் புனாணை அணைக்கட்டு பொத்தானை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல் வளாகத்தில் பொத்தானை முகைதீன் ஜும்மா பள்ளிவாயல தலைவர் அகமட் லெவ்வை ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.
பொத்தானை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கடந்த 15 திங்கட்கிழமை உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான அமைச்சர் பசீர் சேகுதாவூத் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பங்கு பற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்தக் கூட்டம் புனானை மேற்கு பொத்தானை கிராமத்தில் இடம்பெற்றதாக உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்துள்ளார்.
110 முஸ்லிம் குடும்பங்கள் 80 தமிழ் குடும்பங்கள் ஒன்று  சேர்ந்து வாழும் பொத்தானை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இக் கூட்டத்தில்  விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக் கிராம மக்கள் குடியிருக்கும் காணி மற்றும் பயிர்ச்செய்கை காணி என்பன வன பரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமானது எனக்கூறி இவர்களின் பயிர்ச் செய்கையை தடுப்பதாகவும் தொடர்ந்தும் இங்கு மக்கள் மீளக் குடியேறுவதற்கு வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் தடையாக இருப்பதாகவும்அக் கிராமத்திலுள்ள மக்கள் குடியிருக்கும் காணி மற்றும் பயிர்ச் செய்கைக்குரிய காணி என்பவற்றுக்கு காணி உரிமம் மகாவலி அதிகார சபையினால் வழங்கப்பட வேண்டுமெனவும், இக் கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படல் வேண்டும் எனவும் இக்கிராம மக்கள் உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீனிடம் தெரிவித்தனர்.
இவ் விடயம் தொடர்பாக கிரான் பிரதேச செயலாளர் மற்றும் வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளை இக்கிராமத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மக்களை நேரடியாக சந்திக்க வைத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னேடியாக இக்கூட்டம் நடாத்தப்பட்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதாக உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் புனாணை அணைக்கட்டு பொத்தானை முகைதீன் ஜும்மா பள்ளிவாயல் தலைவர் செயலாளர் உட்பட அக் கிராமத்தில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்கள் அதிக எண்ணிக்கையில்  கலந்து கொண்டனர்







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top