அபிவிருத்தி நடவடிக்கைகளில் அக்கறை காட்டாத
தற்போதய மக்கள் பிரதிநிதிகள் குறித்து

முன்னாள் அமைச்சர் மன்சூர் கவலை




கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு அவசியம் தேவையான  பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு  அங்கிருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்காமல் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பது குறித்து முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தனது கவலை தெரிவித்து ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் மன்சூர் மேலும் தெரிவித்ததாவது:-
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் போக்குவரத்துப் பாதை அமைக்கும் திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் போக்கு வரத்து மற்றும் பொருளாதார அபிவிருத்தி கருதி எனது பதவி காலத்தில் அன்றிருந்த  ஜனாதிபதி பிரேமதாசவின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து வந்தேன். ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டம் இன்றுவரை முன்னெடுக்கப்படாத நிலையில் உள்ளது. இத்திட்டம் முன்னெடுக்கப்படாதது எனக்கு வேதனை அளிக்கின்றது.
இது குறித்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது இதற்கு சாத்தியவள அறிக்கை வேண்டும் என்று கூறுகின்றார்.
கடந்த வாரம் சவூதி அரேபிய தேசிய தினத்தையொட்டி கொழும்பில் இடம்பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதை சந்தித்தபோது மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை அமைக்கும் திட்டம் குறித்து என்னால் தற்போதய ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதத்தின் பிரதி, ஜனாதிபதியால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரதி என்பனவற்றை தங்களுக்கு அனுப்பியிருந்தேனே கிடைத்ததா? என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது அவரிடமிருந்து ”எனக்கு ஞாபகம் இல்லை” என்று பதில் வந்தது.
இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் செயல்படும்போது மக்களுக்கு அவசியமான அபிவிருத்தி வேலைகளை எப்படி அப்பிரதேசங்களில் முன்னெடுக்க முடியும்? அதிகாரமுள்ள பிரதி அமைச்சர் ”திட்ட அறிக்கையை” கேட்கின்றார். வரலாற்றில் முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் முதலமைச்சர் ”எனக்கு ஞாபகம் இல்லைஎன்று கூறுகின்றார்.
பாருங்கள் தமிழ் மக்களுக்கு உதவக்கூடிய நாடாக இந்தியா மாத்திரமே உள்ளது. அந்நாட்டின் உதவியுடன்  சீரழிந்த யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதையை தற்போது நவீன முறையில் சீராக்கிக் கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து இந்தியாவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
எமது ஜனாதிபதியோ முஸ்லிம் நாடுகள் பலவற்றுடன் நண்பன் என்று கூறுகின்றார்.  அடிக்கடி போய் வருகின்றார். அந்த நாடுகளின் உதவியுடன் ஏன் மட்டக்களப்பு – பொத்துவில் வரையிலான ரயில் பாதைத் திட்டத்தை முன்னெடுக்க முடியாது? இதற்கு அப்பிரதேசத்திலுள்ள அமைச்சர்கள், முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கமுடியாதா?
மக்களுக்கு அவசியமான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் இருப்பதற்கு அப்பிரதேசத்தில் இருந்து கொண்டிருக்கும் அதிகாரத்திலுள்ளவர்களின் அசமத்தனமான போக்கே காரணமாகும். இவ்வாறு நல்ல பல சந்தர்ப்பங்களை கை நழுவ விட்டால் எதிர்காலத்தில்  மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் மன்சூர் கவலை வெளியிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top