அம்பாறையிலுள்ள முழுக்காணியையும் எடுத்துக்கொண்டு


பேரளவுக்கு வழங்கப்படும் கரையோரக் கச்சேரியை ஏற்க முடியாது.

எமது வாதாட்டம் வேறு விதமாக இருந்து கொண்டிருக்கிறது.

-    அமைச்சர் அதாவுல்லா


அம்பாறை மாவட்டத்திலிருந்து தெஹியத்தக்கண்டி, கிராந்துருக்கோட்டே ஆகிய பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு தமிழ் பேசுகின்ற மக்களுக்கான பெரும்பான்மை ஒழுங்கு அம்பாறைக் கச்சேரியில் செய்யப்படல் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதைவிடுத்து கரையோரக் கச்சேரி என்ற பெயரில்  இம்மாவட்டத்திலுள்ள முழுக்காணியையும் பறி கொடுத்துவிட்டு மக்கள் குடியிருக்கின்ற பிரதேசங்களை மட்டும் இனைத்து ஒரு சில திணைக்களங்களைக் கொண்டதாகத் திட்டமிடப்படுகின்ற பிரிவினை எமக்குத் தேவையில்லை.
இவ்வாறு அமைச்சர் .எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.
2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறுதிப் பகுதியில் கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைக்க அமைச்சர் அதாவுல்லா வருகை தந்த போது கரையோர மாவட்டம் தொடர்பில் இவர் கொண்டிருந்த நிலைப்பாடு தொடர்பில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்  அமைச்சரின் இணைப்பாளர் .சி..சத்தார் தலைமையில் இடம்பெறவிருந்த பொதுக்கூட்டத்தை  அமைச்சர் அதாவுல்லா நடத்தவிரும்பவில்லை.
அந்த இடத்திற்கு சென்றிருந்த நாம் அமைச்சர் அதாவுல்லா வீடு ஒன்றில் இருப்பதாக அறிந்து அவரிடம் கரையோர மாவட்டம் தொடர்பாக கருத்துக்களைக் கேட்டோம். அப்போது அமைச்சர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
அமைச்சர் அதாவுல்லா இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது:-
தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதுதான் அம்பாறை மாவட்டமாகும். கல்லோயா அபிவிருத்தித் திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றுதான் அம்பாறை நகரம் உருவாக்கப்பட்டது. அங்குள்ள கொண்டவட்டுவான் பிரதேசத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் வயல் காணியும் அவர்கள் உருவாக்கிய பள்ளிவாசலும் இன்றும் உள்ளது.
இப்படியான பல தொடர்புகள் இருந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஏதோ அரசியல் காரணங்களுக்காக எங்கோ தூரத்தில் இருந்து கொண்டிருக்கின்ற தெஹியத்தக்கண்டி, கிராந்துருக்கோட்டே போன்ற பிரதேசங்களை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்திருக்கிறார்கள். இதனால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் ரீதியான பலம் இம்மாவட்டத்தில் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கைக்கு மாறான அநீதியான செயல்பாடுகள் காரணமாக கிராந்துருக்கோட்டை, தெஹியத்தக்கண்டி பிரதேசங்களில் வாழ்கின்ற சிங்கள மக்கள் வெகு தூரத்திலுள்ள அம்பாறைக் கச்சேரிக்கு நாம் ஏன் எமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போய் வரல்வேண்டும். எமக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களான பொலனறுவை, மஹியங்கனை போன்ற பிரதேசங்களில் எமக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரமுடியாதா? என்று வினவத் தொடங்கியிருக்கிறார்கள்.
இப்படியான சூழ்நிலையில் கரையோரக் கச்சேரி விடயத்தில் எமது வாதாட்டம் வேறு விதமாக இருந்து கொண்டிருக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள இங்கினியாகல, பதியத்தலாவ, உஹன போன்ற பகுதிகளில் எமது தமிழ் பேசும் மக்களுக்கு தேவைகள் பல இருந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கென உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்திலிருந்து முழுக் காணியையும் அப்படியே பிரித்து எடுத்துக்கொண்டு மக்கள் குடியிருக்கின்ற பிரதேசங்களை ஒன்றிணைத்து மேலதிக கச்சேரி என்ற பெயரில் அரசு எதனையோ தரப்போகின்றது. இதற்கு நாங்கள் ஒருபோதும் உடன்படப்போவதில்லை.
கரையோரக் கச்சேரி  என்கின்ற போது இதற்கென நிலங்கள் எல்லைப்படுத்தப்படல் வேண்டும். திணைக்களங்கள் வேறுபடுத்தப்படல் வேண்டும்.
இந்த திட்டமிடல் எதுவுமில்லாமல் பெயரளவுக்கு வழங்கப்படும் கச்சேரியை நாம் எப்படி ஏற்க முடியும்?
கரையோர மாவட்டத்திற்கான கச்சேரி விபரம் இம் மாவட்டத்திலுள்ள முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கூடி புத்திசாலித்தனமாக யோசித்து தீர்க்கதரிசனமாக முடிவு எடுக்கவேண்டிய விடயமாகும். இப்படியான ஒரு விடயத்தை அவசர புத்தி காரணமாகவோ அல்லது அரசியல் சுயநலத்திற்காக புத்திசாலித்தனம் இல்லாத முறையில் இப்பிரதேச மக்களை விற்றுவிட்டு போகவும் முடியாது.
எனவே, இந்த மாவட்டத்திலிருந்து முழுக் காணியையும் அப்படியே பிரித்து குடியிருப்பு பிரதேசங்களை மட்டும் கொண்ட மேலதிகக் கச்சேரியைக் கொண்டுவருவது இப்பிரதேச மக்களின் எதிர்காலத்தைப் பாழடிப்பதாகும்.
கரையோரக் கச்சேரி என்றில்லாமல் தெஹியத்தக்கண்டி, கிராந்துருக்கோட்டே ஆகிய பிரதேசங்களை அம்பாறை மாவட்டத்திலிருந்து பிரித்து அம்பாறைக் கச்சேரியில் தமிழ் பேசும் மக்களுக்கான பெரும்பான்மை ஒழுங்கு செய்யப்படல் வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். இவ்வாறு அமைச்சர் அதாவுல்லா கரையோரக் கச்சேரி தொடர்பில் எம்மிiடம் கருத்து தெரிவித்தார்.
2003.07.01 ஆம் திகதி வெளியான வீரகேசரியில் இச் செய்தி பிரசுரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: வீரகேசரி 2003.07.01

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top