ஆரவாரமின்றி இன்று காலை
பிரதமராக பதவியேற்கிறார் ரணில்


பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 10.30 மணிக்குப் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக் கொள்வார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கின்ற ஐந்தாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

1993ஆம் ஆண்டு முதல் முறையாகவும், 2001ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும், 2015ஆம் ஆண்டு ஜனவரியில் மூன்றாவது முறையாகவும், 2015 ஓகஸ்ட் மாதம் நான்காவது முறையாகவும், தற்போது, ஐந்தாவது முறையாகவும் அவர் பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார்.

இன்றைய பதவியேற்பு நிகழ்வில் ஐதேகவின் மூத்த தலைவர்கள் மாத்திரமே, பங்கேற்பார்கள் என்றும், ஆடம்பரமோ, ஆரவாரமோ இல்லாத வகையில் இந்த நிகழ்வு இடம்பெறும் என்றும் ஐதேக தவிசாளர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

இன்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர், ஜனாதிபதியுடன் அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக முறைப்படி கலந்துரையாடலை நடத்துவார்.

நாளை அல்லது நாளை மறுநாள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக நேற்றும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன என்றும், இன்று அமைச்சர்கள் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஐதேக துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சரவையாகவே இருக்கும் என்றும், இன்னொரு கூட்டு அரசாங்கமாக இருக்காது என்றும் ஐதேக பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எம்முடன் வந்து இணைந்து கொள்ளலாம். ஆனால், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமாகவே அது இருக்கும்.

வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை எந்த அடிப்படையில் எமது அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வது என்பது தொடர்பாக நாங்கள் நிபந்தனைகளை வைத்திருக்கிறோம்.

புதிய அமைச்சரவை 30 பேரைக் கொண்டதாகவே இருக்கும். அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதாயின் நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை. தேவைப்பட்டால் அதனைக் கோருவோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top