இது எப்படியிருக்கிறது?

தனது உயிருக்கு ஆபத்து இருந்தது
தேர்தல் மேடையைக் கவருவதற்காக,
 கூறிய கட்டுக்கதையே!
இப்படியும் குத்துக்கரணம் அடிக்கிறார் மைத்திரி

ராஜபக்வினரால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று தேர்தல் மேடையைக் கவருவதற்காக, கூறிய கட்டுக்கதையே என்று கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், உங்களின் உயிருக்கு ஆபத்து இருந்ததாக நீங்கள் திரும்பத் திரும்ப கூறி வந்தீர்கள். அப்படியிருக்கும் போது, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்தீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன,

அவையெல்லாம், அரசியல் மேடைகளில் குற்றம்சாட்டப்பட்ட வெறும் அரசியல் பேச்சுக்கள். ஆனால், அண்மையது, என்னைக் கொல்வதற்கான தெளிவான திட்டம்.” என்று பதிலளித்தார்.

அப்படியானால், ராஜபக்ஸ தேர்தலில் வென்றிருந்தால்நீங்களும் உங்களின் குடும்பமும், ஆறு அடி நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருப்போம் என்று தெளிவாக கூறியிருந்தீர்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ”மஹிந்த ராஜபக்ஸ என்னைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று எந்த தகவலும் இல்லை. அவை வெறுமனே, தேர்தல் மேடைகளில், அங்கிருப்பவர்களைக் கவருவதற்காக கூறியவை தான்என்று பதிலளித்துள்ளார்.

அத்துடன் இந்தப் பதிலைக் கூறி விட்டு, செவ்வி கண்ட ஊடகவியலாளரைப் பார்த்து நக்கலாக சிரித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலின் போது, தன்னைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, குண்டுதுளைக்காத அங்கியுடன் பரப்புரை மேடைகளில் தோன்றிய மைத்திரிபால சிறிசேன, தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் மஹிந்த ராஜபக்ஸவினால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று கூறியிருந்தார்.

2015ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி, அனைத்துலக ஊடகமொன்று வழங்கிய செவ்வியில் அவர்

நானும் என்னுடைய பிள்ளைகளும், பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று, இரவு நேரத்தில், குருநாகலவில் உள்ள எனது நண்பன் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்தோம்.

தேர்தலில் நான் தோல்வியுற்றிருந்தால், என்னைச் சிறையிலடைப்பதற்கும் எனது குடும்பத்தினரை அழிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் மாறியிருந்தால், நானும் எனது குடும்பமும், இந்நேரம் உயிரோடு இருந்திருப்போமா எனத் தெரியவில்லை. அதுதான் மஹிந்தவின் ஜனநாயகம். அது எனக்கு நன்றாகத் தெரியும்.

இவர்கள் வெற்றிபெற்று, நான் தோல்வியடைந்திருந்தால், இந்நேரம் பலர் கொல்லப்பட்டு, பலரது கைகால்கள் உடைக்கப்பட்டிருப்பதுடன், பலர் சிறைக்கும் சென்றிருப்பர்என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top