ஐதேமுவை வெட்டிவிட்டு பசில் குழுவுடன்
இரவிரவாக மைத்திரி ஆலோசனை
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில் ரத்துச் செய்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை, ஜனாதிபதியுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் நடத்திய பேச்சுக்களில் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில், நேற்றிரவு 8 மணிக்கு மீண்டும் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்கமைய நேற்றிரவு ஐதேமு தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கத் தயாராகியிருந்த நிலையில், திடீரென, அதிபர் செயலகத்தில் இருந்து. இந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களால் ஜனாதிபதியால் சந்திக்க முடியவில்லை என்றும், இன்று இரவு 8 மணிக்கு இந்தச் சந்திப்பு நடக்கும் என்றும் ஜனாதிபதி செயலத்தில் இருந்து, ஐதேமு தரப்புக்கு தகவல் அனுப்பப்பட்டது. இது ஐதேமு வட்டாரங்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, ஐதேமு தலைவர்களுடனான சந்திப்பை ரத்துச் செய்த ஜனாதிபதி, அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
திலங்க சுமதிபால, சுசில் பிரேம ஜெயந்த, வாசுதேவ நாணயக்கார,உதய கம்மன்பில ஆகியோருடன், பசில் ராஜபக்சவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
நேற்றிரவு நீண்ட நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் இதன் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment