இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது:
பாகிஸ்தானில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேகுகள்




இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்கவேண்டும் என்று கோரி பாகிஸ்தானி நெட்டிசன்கள் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நேற்று முன்தினம் நடந்த விமான தாக்குதலில் தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. இதுதொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.

இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்த நிலையில் அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கின. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டன.

இதனிடையே அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவின் முன்னால் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், 'அத்துடன், பாகிஸ்தான் ஊடகங்கள் போர் குறித்து எதையும் கூறவில்லை. ஆனால், இந்தியாவில் போர் குறித்து  இந்திய ஊடகங்களால் தூண்டப்படுவது வருத்தமடையச் செய்கிறது. நாங்கள் மோதலை விரும்பவில்லை என்று தெரிவிக்க இந்திய பிரமர் மோடிக்கு புதன்கிழமை மாலையிலிருந்து தொலைபேசியில் முயற்சித்தேன். கிடைக்கவில்லை.

அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார்'' என்று அறிவித்தார்.

இம்ரான் கானின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் இம்ரான் கானின் முன்னெடுப்பைப் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தானி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டரில் அதுதொடர்பான ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace மற்றும் #ThankYouImranKhan ஆகிய ஹேஷ்டேகுகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top