சொத்துக்களின் விபரங்களை பகிரங்கப்படுத்தினார்
இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா



தமது சொத்துக்களின் விபரங்களை பகிரங்கப்படுத்திய பல்வேறு கட்சிகளை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து கிழக்கின் முதலாவது மக்கள் பிரதிநிதியாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா நேற்று இணைந்து கொண்டார் .

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச தன்னார்வ நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்ததுடன் அது தொடர்பில் பொது மக்கள் தமது பிரதிநிதிகளுக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்ற விளம்பரங்களையும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வந்தது .

அதன் பிரகாரம் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா உட்பட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமது சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளியிட்டு - அதனை மக்கள் எந்த நேரமும் மக்கள் பார்வையிட முடியும் என்ற அறிவிப்பை வெளியிட இருந்தனர் -

இந்த நிலையில் அன்றைய தினம் இராஜாங்க அமைச்சரின் தொகுதியில் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டி இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை , நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார , தாரக்க பாலசூரிய , விதுர விக்ரமநாயக்க , சுமந்திரன் , மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் அன்றைய தினம் வெளியிட்டனர் , அதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயாகவும் தமது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தி இருந்த நிலையில் ,
7 ஆவது நாடாளுமன்ற உறுப்பினராகவும் , முதலாவது முஸ்லிம் பிரதிநிதியாகவும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா நேற்று இரவு
ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சங்கிதா குணரத்தன தலைமையிலான குழுவினரிடம் தனியார் தொலைக்காட்சி நேரடி நிகழ்வின் போது தனது முழுமையான சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தும் பொருட்டு கையளிப்பு செய்தார் .

அத்துடன் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறான வெளிப்படைத் தன்மையுடன் முன் வந்து செய்வது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் புதிய திருப்பு முனையாக அமையும் என்பதால் அனைத்து சக உறுப்பினர்களும் தங்களது வெளிப்படைத்தன்மையினை காட்ட முன் வாருங்கள் என அழைப்பு விடுத்ததுடன் , மாகாண சபைகள் , உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் இவ்வாறான செயற்பாட்டுக்கு வந்து மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்து நல்லாட்சியை உறுதிப்படுத்த ஒற்றுமையுடன் அணி திரளுமாறும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா இதன்போது அழைப்பு விடுத்தார் ,

தனது சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் முதலாவது மக்கள் பிரதிநிதியாகவும்- முழு முஸ்லிம் சமூகத்தின் முதலாவது அரசியல் பிரதிநிதியாகவும் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் வரலாற்றில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத் தக்கது .

(ஊடகப்பிரிவு)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top