கல்முனைப் பிரதேசத்தில்
பிரதேசவாதத்தையும், இனவாதத்தையும்
எவ்வாறு ஒழிக்கலாம்
முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா கூறும் வழி


பிரதேசவாதம், இனவாதம் என்பனவற்றைக் கருத்தில் கொள்ளாது கல்முனைப் பிரதேசத்திலுள்ள சகல பிரதேச மக்களையும் அரவனைத்து தூர சிந்தனையுடன் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் மக்கள் பிரதிநிதி ஒருவரால் மாத்திரமே இப்பிரதேசத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் மனதை வெல்ல முடிவதுடன் பிரதேச வேற்றுமைகளையும் இல்லாது ஒழிக்கமுடியும் என முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.
கல்முனைப் பிரதேசத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்தும் அபிவிருத்தி குறைபாடுகள் குறித்தும் கலந்துரையாடியபோதே மையோன் முஸ்தபா இக்கருத்தை தெரிவித்தார்.
கல்முனைப் பிரதேசத்தில் பிரதேச வேற்றுமை காட்டாது சேவையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
கல்முனை நகரம் நவீன முறையில் சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டதாக தூர நோக்குடன் வயல்நிலப் பக்கமாக விஸ்த்தரிக்கப்படல் வேண்டும். நகரத்தின் சுற்று வட்டமே புதிய நகரத்தில்தான் உருவாக்கப்படல் வேண்டும்.
இவ்வாறு உருவாக்கப்படும் நகரத்தின் புதிய சுற்று வட்டத்தை நோக்கியதாக சம்மாந்துறை பிரதேசத்தின் சுற்று வட்டப்பாதை வயல்பாதையூடாக இணைக்கப்படல் வேண்டும். இது போன்று குடியேற்றப் பிரதேசங்களான மத்திய முகாம், சவளக்கடை, சடையந்தலாவ பாதைகளும், அக்கரைப்பற்று, மட்டக்களப்பு பிரதான பாதைகளும் புதிய சுற்று வட்டத்தோடு இணைக்கப்படல் வேண்டும்.
இவ்வாறு உருவாக்கப்படும் புதிய கல்முனை நவீன நகரத்தில் கல்முனை பிரதேசத்தின் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய சகல அலுவலகங்களும் கொண்டுவரப்படல் வேண்டும்.
தொழில் நுட்பக் கல்லூரி. தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் ஒரு சில பீடங்கள், பாடசாலைகள், வியாபார ஸ்தலங்கள், என்பன போன்றவை இங்கு ஏற்படுத்தப்படல் வேண்டும்.
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான புகையிரதப் பாதை கூட தெஹியத்தக்கண்டி போன்ற சிங்களப் பிரதேசங்களூடாக அம்பாறை வந்து அங்கிருந்து மத்திய முகாம் ஊடாக கல்முனை வந்தடைய வேண்டும். இதனால் சிங்கள மக்களின் பிரதேசங்களில் உள்ள உற்பத்தி பொருட்கள் கல்முனை வந்தடையவும் கல்முனைப்பிர தேச தமிழ், முஸ்லிம் மக்களின் உற்பத்தி பொருட்கள் சிங்களப் பிரதேசங்களுக்கு சென்றடையவும் வழியேற்படும்.
கல்முனையை அடுத்துள்ள சவளைக்கடையில் தொழிற்பேட்டை ஒன்று அமைக்கப்படல் வேண்டும். இதன் மூலம் இப்பிரதேசத்திலுள்ள தமிழ் , முஸ்லிம் இளைஞர்,யுவதிகளுக்கு தொழில் பெற வாய்ப்புக்கள் ஏற்படும்.
இதுபோன்று தூர சிந்தனையுடன் இன,பிரதேச வேற்றுமை காட்டாது கல்முனை நகரத்தை திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களின் மனதை வெல்ல முடிவதுடன் பிரதேச வேற்றுமைகளையும் இல்லாது ஒழிக்கமுடியும். இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top