தனியான உள்ளூராட்சி சபை வேண்டும்
என்ற வலுவான கோரிக்கையுடன்
சமாதானமாக மக்கள் வாழும் சாய்ந்தமருதில்
முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்துகின்றது…!


சாய்ந்தமருதிலுள்ள மக்கள் தங்களுக்கென்று தனியான உள்ளூராட்சி சபை வேண்டும் என்ற வலுவான கோரிக்கையுடன் அமைதியாகவும்  சமாதானமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. சாய்ந்தமருது மக்களின் சமாதான வாழ்க்கையைக் குலைத்து  மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனின் வாகனம் மற்றும் பிரதேச அமைப்பாளரின் வீடு என்பன கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா இவ்வாறு கூறியுள்ளார்.

பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,;

சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு என தனியான உள்ளூராட்சி சபை கிடைக்கும் வரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பில்லாமல் சுயேச்சையாகவே தொடர்ந்தும் செயல்படுவார்கள். சாய்ந்தமருது மக்களை. இந்த முடிவிலிருந்து எவராலும் ஆசைகள் காட்டி வேறுபடுத்தி எடுக்க முடியாது.

அமைதியாக வாழும் சாய்ந்தமருது மக்களை பிளவுபடுத்த அரசியல் கட்சிகள் ஒருபோதும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. ஊரில் திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்குபவர்களுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கென்று தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றினையே இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான முன்னெடுப்புகளைத் தொடரும் நிலையில் அரசியல் கட்சிகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதை ஒருபோதும் எங்களால் அனுமதிக்க முடியாதுஇவ்வாறு பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top