இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு
19,363 தம்பதிகளுக்கு சீன அரசு அனுமதி

குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ள நிலையில், இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ள 19,363 தம்பதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளும் விதத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சீன அரசு பல ஆண்டுகளாக கடுமையாகக் கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது உள்ளிட்ட மக்கள்தொகை விகிதாசார நிலை கவலை அளிக்கும் விஷயமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, "ஒரே குழந்தை' திட்டத்தை தளர்த்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது.
இதையடுத்து, ஒரு குழந்தையுள்ள தம்பதிகள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதை அனுமதிப்பதற்கு மாகாணங்கள் அளவிலான நிர்வாகம் முடிவு எடுத்து வருகிறது.
பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தம்பதிகள் இரண்டாம் குழந்தை பெறுவதை பெரும்பான்மையான மாகாணங்கள் இப்போது அனுமதிக்கின்றன. இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள 19,363 தம்பதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பெய்ஜிங் நகர சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்கு, இரண்டாவது குழந்தைக்கு 21,249 பேர் மனு செய்திருந்தனர். அனுமதி பெற்ற பெண்களில் 56 சதவீதத்தினர் 31-35 வயதுடையவர்கள், 40 வயதைக் கடந்த பெண்கள் 537 பேர்.
விண்ணப்பிக்கும் தம்பதி தங்களது பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருக்க வேண்டும் என்பது முன்பு முக்கிய நிபந்தனையாக இருந்தது.

இந்த விதிமுறை இப்போது தளர்த்தப்பட்டு, தம்பதியில் ஒருவர் மட்டும் தங்களின் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top