ஆப்கானிஸ்தானில்
2 லாரி குண்டுகள் வெடிப்பு
18 பேர் உடல் சிதறி பலி!
ஆப்கானிஸ்தானில்
தலீபான் போராளிகள்
சக்திவாய்ந்த 2 லாரி குண்டுகளை வெடிக்க செய்தனர்.
இதில் சிக்கி
18 பேர் உடல்
சிதறி உயிரிழந்தனர்
என அறிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் காஜ்னி மாகாணத்தின் தலைநகரான காஜ்னியில் உளவுத்துறை, பொலிஸ் அலுவலகங்கள் எல்லாம் ஒரே வளாகத்தில் இயங்கி வந்தன. இந்த வளாகத்துக்கு வெளியே தலீபான் போராளிகள் நேற்று சக்தி வாய்ந்த 2 லாரி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். அப்போது விண்ணைப் பிளப்பது போல பயங்கர சத்தம் கேட்டது. பெரிய ராட்சத பள்ளம் ஏற்பட்டது. தீப்பற்றி எரிந்தது என இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குண்டுவெடிப்பில் சிக்கி குறைந்தது 18 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 150 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸார் எனக் கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையை உளவுத்துறை தலைமை தாங்கி மேற்கொண்டு வந்ததில் ஆத்திரம் அடைந்துதான் இந்த அதிபயங்கர தாக்குதலை தலீபான் போராளிகள் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக காஜ்னி மாகாணத்தின் கவர்னர் மூசா கான் அக்பர்ஜாதா கூறும்போது, ‘‘இந்த லாரி குண்டு வெடிப்பில் 19 போராளிகளுக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் பொலிஸ் வளாகத்தில் உள்ள அதிவிரைவுப்படை பொலிஸ் அலுவலகம் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளனர்”’ , ‘‘போராளிகள் வெடிக்கச் செய்த வெடிகுண்டுகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அந்த குண்டு வெடிப்புகளால் வீடுகளின் கூரைகள், ஜன்னல்கள் இடிந்து விழுந்து அதில் சிக்கி ஏராளமான அப்பாவி பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றி அமைந்துள்ள இந்த காஜ்னி மாகாணத்தில் போராளிகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல், அண்மை காலத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக அமைந்து விட்டது எனக் கருதப்படுகின்றது.
கடந்த காலத்தில் ஆப்கானிஸ்தானில் இத்தகைய லாரி குண்டுவெடிப்புகளை தலீபான் போராளிகளின் ஒரு பிரிவான ஹக்கானி பிரிவினர் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஆண்டுகளாக நடந்து வந்த ஆப்கானிஸ்தான் போரின் இறுதிக்கட்டம் குறித்து வேல்சில் நேட்டோ மாநாடு விவாதிக்கத்தொடங்கும் நிலையில் இந்த தாக்குதலை தலீபான் போராளிகள் நடத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment