ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் 60 இங்கிலாந்து பெண்கள்
டெலிகிராப் நாளேட்டில் தகவல்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள், ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் போராட்ட இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை பிடித்து சுதந்திர இஸ்லாம் நாட்டை உருவாக்கும் கொள்கையுடன் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் போராடி வருகின்றனர். அல் கய்தாவின் ஆதரவு பெற்ற இந்த அமைப்பினர் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஒருசில பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கலிபாத் எனப்படும் இஸ்லாம் தேசத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்தனர்.
ஈராக்கை கைப்பற்றும் முயற்சியில் அந்நாட்டு இராணுவத்தை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் பெண்களாலேயே நடத்தப்படும் அல்கன்சா என்ற பாதுகாப்பு படை செயல்படுகிறது. சிரியாவில் உள்ள ரக்கா என்ற நகரத்தில் உள்ள  இந்த படையில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் இணைந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இது மேற்கத்திய நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அல்கன்சா படையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது பற்றி, இங்கிலாந்தில் உள்ள பயங்கரவாதம் குறித்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. மேலும், தற்போது 18 முதல் 24 வயது நிரம்பிய இங்கிலாந்து பெண்கள் ஏராளமானோர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ்சில் இணைந்துள்ளதாக டெலிகிராப் நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் படையில் சேரும் பெண்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் தரப்படுகிறது. இவ்வாறு படையில் சேர்ந்த பெண்களை போராட்ட செயல்களில் ஈடுபடுத்தப்படுவதில்லை என்றும், அவர்கள் ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு நடவடிக்கை போன்றவற்றில் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top