அனைத்து கட்சிகளுக்கும் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் நோட்டிஸ் 

அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படியும் அறிவுரை

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு அனைத்து கட்சிகளும் பேசி தீர்வு காணும்படி பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியிருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் நோட்டிஸ் அனுப்பவும்  நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நவாஸ்ஷெரீப் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றதாகவும், எனவே அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகக்கோரியும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இன்சாப் கட்சியும், மதகுரு தார் உல் காத்ரியின் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இணைந்து இஸ்லாமாபாத்தில் பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி பாகிஸ்தானில் பிரதமரால் கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ள இராணுவம் நேற்று முன்தினம் கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக இராணுவ தளபதி ரஹீல் ஷெரீப், தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் நவாஸ்ஷெரீப்பையும் சந்தித்து பேசினார்.
இந்தநிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தையும் உடனடியாக கூட்டி தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் நேற்று முன்தினம் மாலை நவாஸ்ஷெரீப்பை நேரில் சந்தித்து வலியுறுத்தின.
இதனை ஏற்றுக் கொண்ட அவர், தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயந்து விட்டுவிடமாட்டேன். இதனால் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.மேலும் உடனடியாக பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் அவசரமாக கூட்டி விவாதிப்பதற்கும் நவாஸ்ஷெரீப் ஒப்புக் கொண்டார்.
அதன்படி நேற்று காலை பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. இம்ரான்கான் கட்சியின் 34 எம்.பி.க்கள் தவிர ஏனைய கட்சிகளின் பெரும்பாலான எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்த கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். எல்லா எம்.பி.க்களும் பேசி முடித்தபின்னர் பிரதமர் பதில் அளித்து பேசுவார். எனவே, பாராளுமன்ற கூட்டு கூட்டத் தொடர் இந்த வாரம் முழுவதும் நீடிக்கும்என்று தெரிவித்தது.
இந்த கூட்டத்தொடரின்போது, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நவாஸ்ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து விலகக் கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இம்ரான்கான், தார் உல் காத்ரி ஆகியோரது கட்சிகளின் போராட்டம் குறித்து பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நேற்று விசாரணை நடந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியை அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டு தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

கடந்த சில நாட்களாக போர்க்களமாக மாறியிருந்த தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று அமைதி திரும்பியது. எந்த வன்முறையும் நடந்ததாக தகவல் எதுவும் இல்லை. உச்சக்கட்ட பாதுகாப்பு மிக்க சிகப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த இடங்களில் இம்ரான்கான், தார் உல் காத்ரி கட்சிகளின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அமைதியாக உட்கார்ந்து இருந்தனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top