நெருக்கடியான நிலைக்கு நாடாளுமன்றத்தின்
மூலமாகவே தீர்வு கிடைக்கும்
விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ரணில்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைக்கு நாடாளுமன்றத்தின் மூலமாகவே தீர்வு கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே ரணில் இதை கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து கூறுகையில்,
“இந்த நாட்டில் உள்ள மோசடிகள், லஞ்சம், ஊழல் போன்ற சமூக விரோத செயற்பாடுகளை அழிப்பதற்கு 2015 ஜனவரி 8ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள்.
அதற்கு பிறகு என்னை பிரதமராக்கி நாட்டில் ஆட்சி முன்னெடுக்கப்பட்டது. தேசிய அரசாங்கம் என்ற வகையிலேயே நாம் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றோம்.
நாட்டில் நிலவிய அனைத்து ஊழலையும், சட்டவிரோத செயற்பட்டுகளையும் கட்டுப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றினோம்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று எனக்கும், அமைச்சர்களுக்கும் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நான் இவற்றை ஏற்றுக்கொள்கின்றேன்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவரே நாட்டின் பிரதமர் என அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காத ஒருவரை பிரதமாரக மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தாம் செய்த இந்த தவறை மறைப்பதற்காக சிறு பிள்ளைகள் கூட நம்பாத கதைகளை தற்போது கூறுகின்றார்.
தற்போது நடைபெறும் சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத சட்டவிரோத, நீதி விரோத செயற்பாடாகும். இதை அண்மையில் ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.
நாடாளுமன்றத்தை கூட்டுமாறே நாட்டில் உள்ள தேசிய கட்சிகள் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆகவே நானும் சபாநாயகரிடம் தாழ்மையான கோரிக்கையை முன்வைக்கின்றேன் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு.தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை நாட்டுக்கு நல்லது அல்ல.
வரிசையில் நிற்கும் யுகம் ஆரம்பித்து விட்டது, அரச சேவை பாதிக்கப்பட்டு விட்டது, இந்த அசாதாரண நிலையால் பாதிக்கப்படுவது நாம் மட்டும் அல்ல. எமது எதிர்கால சந்ததியினருமே.
அரசியல் அமைப்புக்கு எதிரான, சர்வாதிகார ஆட்சிக்கு இந்த நாட்டை தள்ளுவதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.தற்போதைய சூழ்நிலையில் இலங்கை மக்கள் மட்டுமல்ல உலகளவிலும் பலர் எம்முடன் இருக்கின்றார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment