ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக
அங்கீகரித்தார் சபாநாயகர்
அரசியலில் உச்சகட்ட குழப்பம்
பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முடக்கியுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அங்கீகரித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் நவம்பர் மாதம் 5-ம் திகதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு ரணில் விக்கிரமசிங்க கடிதம் அனுப்பினார்.
பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ர்ணில் விக்கிரமசிங்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 16-ம் திகதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்தார். இதைதொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் அரசு கார் திரும்பப்பெறப்பட்டது.
தற்போது, அரசியலில் உச்சகட்ட திருப்பமாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அங்கீகரித்துள்ளார். அவருக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தை நவம்பர் 16-ம் திகதி வரை முடக்கி வைத்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றையும் சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற முடக்கம் நாட்டில் மிக தீவிரமான, விரும்பத்தகாத எதிரிவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என தனது கடிதத்தில் அவர் எச்சரித்துள்ளார்.
சபாநாயகருடன் ஆலோசித்த பின்னரே பாராளுமன்றத்தை கூட்டவும், முடக்கவும் வேண்டும். எனவே, உங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஸ பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவின் சிறப்பு உரிமைகள் தொடர வேண்டும் எனவும் அவர் வலியிறுத்தியுள்ளார்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் இலங்கை அரசியலில் தற்போது உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜெயசூரியா ஜெயசூர்யா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கையின் அதிகாரப்பூர்வ, சட்டப்படியான பிரதமராக ரணில் விக்ரசிங்க தான் என்பதை அங்கீகரிக்கிறேன். நாடாளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை உள்ள ஒருவரைத்தான் பிரதமராக ஏற்க முடியும். நாட்டில் சிறந்த நிர்வாகத்தையும், ஜனநாயகத்தையும் கட்டிக் காட்டும் பொறுப்பு விக்ரமசிங்கவுக்குத்தான் இருக்கிறது.
மேலும், எந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் திகதி வரை முடக்கி இருக்கிறீர்கள். நாடாளுமன்றத்தை முடக்கிவைப்பது, மிகத்தீவிரமான, விரும்பத்தகாத விளைவுகளை நாட்டில் ஏற்படுத்தும்.
நாடாளுமன்றத்தை நீட்டித்து அறிவிப்பதும், முடக்குவதும் சபாநாயகருடன் கலந்து பேசித்தான் ஜனாதிபதி முடிவு எடுக்க முடியும். நாடாளுமன்றத்தை முடக்கிவைத்துள்ளது குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தை நீட்டிப்பதும், முடக்குவதும் சபாநாயகருடன் கலந்துபேசிச் செய்ய வேண்டிய நடவடிக்கை என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியகடமை எனக்கு இருக்கிறது. ஆதலால் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
பிரதமர் பதவியில் இருந்து ஒருவர் நீக்கப்படாத நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர்மட்ட பாதுகாப்பை ஏன் நீக்கினார்கள் என்பதையும் கூற வேண்டும்
அனைத்து எம்.பி.க்களின் உரிமைகள், அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதிலும் நாட்டில் அறிவிக்கப்படாத அரசியல் குழப்பம், சிக்கல் ஏற்படும்போது, அந்தப் பொறுப்பு எனக்கு அதிகரிக்கும்.
ரணில் விக்ரமசிங்கவின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி எனக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் வேறு ஒருவர் பெரும்பான்மையை நிரூபிக்காத வரை ரணிலுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
.
0 comments:
Post a Comment